அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய தெளிவு
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய தெளிவு
مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறானோ அவன் ஷிர்கு செய்து விட்டான்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3251
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறானோ அவன் ஷிர்கு செய்து விட்டான் என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. அல்லாஹ் அல்லாதவர்கள் மீது படைப்புகள் மீது சத்தியம் செய்யும் ஆயத்துக்களை திருக்குர்ஆனில் பல இடங்களில் நம்மால் காண முடியும். உதாரணமாக
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ
குர்ஆன் கூறுகிறது (நபியே!) உங்கள் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
சூரா ஹிஜ்ரத் ஆயத் 72
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ
குர்ஆன் கூறுகிறது (மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகளின் மீதும் சத்தியமாக!
சூரா பலத் ஆயத் 3
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ
குர்ஆன் கூறுகிறது அத்தியின் மீதும், ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
சூரா தீன் ஆயத் 1
மேற்கூறிய ஆயத்துக்களை நன்றாக பாருங்கள். அல்லாஹ் மனிதர்கள் மீதும் அது அல்லாத படைப்புகள் மீது சத்தியம் செய்துள்ளான். ஆக அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவது ஷிர்க் என்றால் அந்த ஷிர்கை அல்லாஹ் செய்ய மாட்டான். அதுபோல அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஷிர்க் என்றால் அந்த ஷிர்கை அல்லாஹ் செய்திருக்க மாட்டானே. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
குறிப்பு :- மேற்கூறிய ஹதீஸின் உன்மையான விளக்கம் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது வணங்கும் நோக்கில் யார் சத்தியம் செய்கிறானோ அவன் ஷிர்கு செய்து விட்டானே தவிர மனிதர் என்ற நோக்கில் படைப்புகள் என்ற நோக்கில் சத்தியம் செய்தால் அது ஷிர்காக கருதப்பட மாட்டாது.
فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6108
யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும் என்பதாக குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
ஆக சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும். அது அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வதை விட மௌனம் சிறந்தது. இவைகளை தவறாக புரிந்து கொண்டு அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது கூடாது. அது வழிகேடு என்று மடத்தனமாக கூறிவிடக்கூடாது. கீழ் கானும் குர்ஆன் ஆயத்துக்களை நன்றாக பாருங்கள்.
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
குர்ஆன் கூறுகிறது வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான்.
சூரா பகரா ஆயத் 225
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ
குர்ஆன் கூறுகிறது உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான்.
சூரா மாயிதா ஆயத் 89
மேற்கூறிய இரு ஆயத்துக்களையும் நன்றாக பாருங்கள் வீனான சத்தியம் அதாவது அல்லாஹ் அல்லாதவர்கள் மீது மனதில் எந்தவித நாட்டமும் இன்றி உலக விஷயங்களை கருத்தில் கொண்டு நாம் அடிக்கடி செய்யும் சத்தியத்திற்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்க மாட்டான். அது அல்லாமல் மார்க்க விஷயங்களில் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யக் கூடாது இந்த விஷயத்தில் மௌனம் சிறந்தது என்ற கருத்தையே மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மனதில் எந்தவித நாட்டமும் இன்றி அல்லாஹ் அல்லாதவர்கள் மீது உலக விஷயயத்திற்க வேண்டி சத்தியம் செய்வது குற்றமாக கருதப்பட மாட்டாது. அதுபோல மார்க்க விஷயங்களில் நீங்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து. அவைகளை மீறிய காரணத்திற்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பான் என்ற கருத்தை நாம் உங்களுக்கு மீண்டும் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்