இரவு தொழுகைகள் பற்றிய சிறப்புக்கள்

135

இரவு தொழுகை பற்றிய சிறப்புக்கள்

 

இறைவன் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக முக்கியமான மூல வணக்கங்களில் ஒன்றுதான் பர்ளு தொழுகை இதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் அது போன்று இரவு காலங்களில் தொழப்படும் சுன்னத்து தொழுகை இது கட்டாய கடமை இல்லாவிடினும் அதை தொழும் படி இஸ்லாம் ஆர்வம் ஊட்டியுள்ளது . எனவே இதனுடைய பிரதிபலன்களை உணர்ந்தும் நன்மைகளை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இத்தொழுகையை பேனுதலாக நிறைவேற்றுவது அவசியமாகும்

 

♦️காரணம் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக சுன்னத்தான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது போன்ற சுன்னத்தான வணக்கங்களையும் அதன் சிறப்புகளையும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصَّلاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاةُ اللَّيْلِ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பர்ளு தொழுகைக்கு பிறகு சிறப்புக்குரிய தொழுகை இரவு காலங்களில் தொழப்படும் தொழுகையாகும்

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் முஸ்லிம் 1163 திர்மிதி 438, நஸாயி 1613

 

♦️பர்ளு தொழுகைக்கு பிறகு சிறப்புக்குரிய தொழுகை இருக்கும் என்றால் அது இரவு காலங்களில் தொழப்படும் சுன்னத்து தொழுகை தான். இவைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் பல சிறப்புகளை நாம் அடைந்து கொள்ளலாம்.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَان يقُومُ مِنَ اللَّيْلِ حتَّى تتَفطَرَ قَدمَاهُ، فَقُلْتُ لَهُ، لِمْ تصنعُ هَذَا يَا رسولَ اللَّهِ، وقدْ غفَرَ اللَّه لَكَ مَا تقدَّمَ مِنْ ذَنبِكَ وَمَا تأخَّرَ؟ قَالَ: أَفَلاَ أُحِبُّ أَنْ أكُونَ عبْداً شكُوراً؟

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கால்கள் வீங்கும் அளவிற்கு இரவு வணக்கத்தில் ஈடுபவர்களாக இருந்தார்கள்.உங்களது முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட போது நான் அல்லாஹ்விற்கு விருப்பமுள்ள நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆதாரம் புஹாரி 4837

 

♦️முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு தொழுகைகளில் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள் மேலும் இது போண்ற தொழுகைகளை தொழுவதன் மூலம் இறைவனுடைய விருப்பத்திற்குறியவர்களாக நாமும் ஆக முடியும் என்பதாக விளங்கி கொள்ள முடிகிறது.

 

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ، فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَي رَبِّكُمْ، وَمَكْفَرَةٌ للِسَّيِّئَاتِ، وَمَنْهَاةٌ عَنِ اْلإِثْمِ

 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இரவு தொழுகையை அவசியம் தொழுதுவாருங்கள்! அது உங்கள் முன்னோர்களில் நல்லோரின் வழிமுறை, இதன் மூலம் உங்கள் இரட்கனின் நெருக்கம் கிடைக்கும், பாவங்கள் மன்னிக்கப்படும், தீமைகளிலிருந்து காக்கப்படுவீர்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ உமாமா பாஹிலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் ஹாகிம் 1242

 

♦️இரவு தொழுகைகளை தொழுவதன் மூலம் நம்முடைய முன்னோர்களான ஸாலிஹீன்களுடைய நல்ல வழிமுறைகளை பின்பற்றும் வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன இதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ غُرَفًا يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا قِيلَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ لِمَنْ أَطَابَ الْكَلامَ، وَأَطْعَمَ الطَّعَامَ، وَبَاتَ قَائِمًا وَالنَّاسُ نِيَامٌ

 

சுவனத்திலே ஒரு அறை இருக்கிறது. அதன் உள்ளிருந்து வெளிப் பகுதியையும் வெளியே இருந்து உள் பகுதியையும் பார்க்க முடியும். அது யாருக்கு கிடைக்கும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நல்ல பேச்சுக்களை பேசி பிறருக்கு உணவளித்து மக்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குபவருக்கு கிடைக்கும் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் திர்மிதி 1984

 

♦️சுவனத்தில் ஒரு அறை இருக்கிறது அந்த அறையை உள்ளிருந்து வெளிப் பகுதியையும் வெளியிலிருந்து உள் பகுதியையும் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் இரவு தொழுகைகளை பேனுதலாக சரிவர நிறைவேற்றுபவர்களுக்கு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

♦️எனவே பல சிறப்புக்கள் நிறைந்த இரவு தொழுகைகளை இரவு காலங்களில் தொழுதுவரும்படி மக்களுக்கு ஆர்வமூட்டுவது மட்டுமின்றி தஹஜ்ஜத் தொழுகை என்றும் வித்ரு தொழுகை என்றும் தராவீஹ் தொழுகை என்றும் வெவ்வேராக பிரித்து அதை எவ்வாறு தொழ வேண்டும் எந்த எந்த நேரத்தில் தொழ வேண்டும் எத்தனை ரகாத்துக்கள் தொழ வேண்டும் என்பதையெல்லாம் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு வழிகாட்டி தந்துள்ளார்கள் அந்த அடிப்படையில் சத்திய ஸஹாபாக்கள் தாபீஈன்கள் அவர்களுடைய காலங்களில் அதனை நடைமுறை படுத்தி பல சிறப்புக்களை அடைந்துள்ளனர் அது போண்று நாமும் இவ்வாறான இரவு தொழுகைகளை தொழுது இறைவனுக்கு விருப்பத்துக்குரிய ஓர் அடியானாக நாமும் மாறவேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.