இஸ்லாம் கூறும் தாயத்து

332

இஸ்லாம் கூறும் தாயத்து

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

1) கேள்வி :- தாயத்து என்றால் என்ன?

 

பதில் :- தமீமா என்ற அரபுச் சொல்லுக்கு தாயத்து என்பதாகக் கூறப்படுகிறது. தாயத்து என்பது ஓர் மணி கலந்த மாலையாகும். உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் போடும் நகைகளை போன்றது.

 

تميمة :- كانوا في الجاهلية يعتقدون أن ذلك يدفع الآفات

 

(தாயத்து என்பது ஓர் மணியாகும். அல்லது தலையில் மாற்றப்படும் ஓர் மாலையாகும் மேலும்) தாயத்து :- அறியாமைக் காலத்தில் ஆபத்துகளிலிருந்து இது காப்பாற்றும் என்று ஜாஹிலியத்து மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் (பத்ஹுல் பாரி) என்ற நூலில் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

2) கேள்வி :- ஷிர்குள்ள தாயத்துக்களை தொங்கவிடுவது கூடுமா?

 

பதில் :- அறியாமை காலத்து மக்கள் சிலைகளுடைய பெயர்கள் அது அல்லாத ஷிர்க்குள்ள வாசகங்களை எழுதி அவைகளை கொண்டு சுய பாதுகாப்பு தேடும் நோக்கில் தாயத்தாக தொங்கவிட்டார்கள். இதனால் தான் இது போன்ற தாயத்துக்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் (ஷிர்க்) இணைவைப்பு என்பதாகக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். (அவர்களில்) ஒன்பது பேர் (நீங்கள்) பைஅத் (உடன்படிக்கை) செய்தீர்கள். ஒருவரை விட்டு விட்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது பேரிடம் பைஅத் செய்தீர்கள் ஒருவரை விட்டு விட்டீர்களே? என்று கேட்டார்கள். (அதற்கு) அவர் மீது தாயத்து இருந்தது என்று கூறினார்கள் (அவர்) தனது கையை நுழைத்து அதை அறுத்தார். (பின்னர்) அவரிடம் பைஅத் செய்தார்கள். மேலும், யார் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்பதாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உக்பா இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 17442, 17404

 

குறிப்பு :- தாயத்து (ஷிர்க்) இணைவைப்பு சம்பந்தமாக இன்னும் சில ஹதீஸ்கள் அபூதாவூத் 3883, இப்னு மாஜா 3530 நஸாயி 5088 அஹ்மது 3615 போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

3) கேள்வி :- உலமாக்களே! கூடு, நாடா, தகடு, குப்பி, மாஸ்க், ஆடை, கவசங்கள், போன்றவைகளை தான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயத்து என்று கூறினார்களா?

 

பதில் :- இஸ்லாத்தை பொருத்த வரையில் கூடு, நாடா, தகடு, குப்பி, மாஸ்க், ஆடை, கவசங்கள், போன்றவைகளை தான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயத்து என்று கூறியதாக ஹதீஸ்களில் எவ்வித ஆதாரங்களும் கிடையாது. மேலும் تميمة தமீமா என்ற அரபுச் சொல்லுக்கு பாதுகாப்பு கவசம் தாயத்து என்பதாகக் கூறப்படுகிறது. மனிதர்களின் உடலில் அணியப்படும் பாதுகாப்பு கவசங்களை பற்றி மட்டுமே இங்கு பார்க்கலாம்.

 

1) மோதிரம் :- சில மோதிரங்கள் தீங்கிலிருந்து விடுபடும் நோக்கில் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணியப்படுகிறது. இது பல கோணங்களில் உள்ளது. ஷிர்க் இணைவைப்பு சம்பந்தப்பட்ட வசனங்கள் எழுதிய மோதிரமும் உள்ளது. மேலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அல்லாஹ்வின் பெயர்களை எழுதிய அது அல்லாத இறைவசங்களை எழுதிய மோதிரங்களும் உள்ளது.

 

2) கூடு :- ஷைத்தானின் தீங்கிலிருந்து விடுபடும் நோக்கில் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணியப்படுகிறது. இது பல கோணங்களில் உள்ளது. ஷிர்க் இணைவைப்பு சம்பந்தப்பட்ட வசனங்கள் எழுதிய கூடுகளும் உள்ளது. குர்ஆன் ஹதீஸிலுள்ள துஆக்களை எழுதிய கூடுகளும் உள்ளது.

 

3) மாஸ்க் :- கொரோனா போன்ற நோய்கள் அது அல்லாத தொற்று நோய்களில் இருந்து விடுபடும் நோக்கில் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணியப்படுகிறது.

 

4) தஸ்பீஹ் போன்ற மாலை :- இது மத நம்பிக்கை பிரகாரமும் அது அல்லாமல் பாதுகாப்பு நம்பிக்கை பிரகாரமும். அல்லது பாதுகாப்பு நம்பிக்கை இன்றி சர்வ சாதாரணமாகவும் மலர்களால் அணியப்படுகிறது.

 

5) நகைகள் :- இது பல கோணங்களில் உள்ளது. சர்வ சாதாரணமாக அணியப்படும் நகைகளும் உள்ளது. அது போன்று தாலி கயிறு போன்ற நகைகள் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) மாற்று மத சகோதரிகள் பார்க்கின்றனர்.

 

6) தகடு :- ஷைத்தானின் தீங்கிலிருந்து விடுபடும் நோக்கில் ஷிர்க் இணைவைப்பு சம்பந்தப்பட்ட வசனங்களை தகட்டில் எழுதி அவைகளை அணிகிறார்கள். இன்னும் சிலர் திருக்குர்ஆன் ஹதீஸிலுள்ள துஆக்களை தகட்டில் எழுதி அவைகளை பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணிகிறார்கள்.

 

7) நாடா மற்றும் நூள் :- இது பல கோணங்களில் உள்ளது. இது சர்வ சாதாரணமாக எந்த வித நோக்கமும் இன்றி அணிகிறார்கள். மேலும் அவரவர் நம்பிக்கை பிரகாரம் ஷிர்குள்ள வாசகங்களை ஓதி ஊதி அல்லது திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான துஆக்களை ஓதி ஊதி பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணிகின்றார்கள்.

 

8) ஆடை :- இது பல கோணங்களில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்களும் உடலை மறைக்கும் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) இதனை அணிந்து வருகிறார்கள். மேலும் முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவது மட்டுமின்றி பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) முகத்திரையும் அணிந்து வருகிறார்கள்.

 

9) யுத்தகவசம் மற்றும் கெல்மட் :- மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள கெல்மட்டை பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணிகிறார்கள். மேலும் யுத்தங்களுக்கு செல்பவர்கள் யுத்தகவசங்களை தன்னை பாதுகாத்துக் கொள்ளும் பாதுகாப்பு கவசம் (தாயத்தாக) அணிகிறார்கள். மேலும் அது அல்லாத முறைகளிலும் பல கவசங்களை பாதுகாப்பு என்ற நோக்கில் உடலில் அணியப்படுகிறது.

 

மேற்கூறிய பாதுகாப்பு கவசங்கள் மனிதர்களின் நம்பிக்கை பிரகாரம் உடல்களில் ஏதோ ஓர் வகையில் அணியப்படுகிறது. இதில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தெந்த பாதுகாப்பு கவசம் (தாயத்துக்களை) ஷிர்க் இணைவைப்பு என்று குறிப்பிட்டு கூறியதாக எவ்வித ஆதாரங்களும் ஹதீஸ்களில் கிடையாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

4) கேள்வி :- தாயத்து அதாவது பாதுகாப்பு கவசங்கள் பல கோணங்களில் உள்ளது. அதில் எது ஷிர்க்? என்பது பற்றி உங்களால் விளக்க முடியுமா?

 

பதில் :- தாயத்து என்பதற்கு பாதுகாப்பு கவசம் என்று பொருள் கொள்ளப்படும். அதாவது மனித உடலில் அணியப்படும் ஓர் ஆடை அல்லது ஓர் மணி கழந்த மாலை, நூல் அல்லது நாடா அல்லது மாஸ்க் அல்லது இரும்பினால் ஆன ஓர் கவசம் அல்லது அது அல்லாத வேறு விதமான பாதுகாப்பு கவசங்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது கீழ் கானும் சட்டங்களை கூர்ந்து கவனியுங்கள்.

 

١) மேற்கூறியவைகளை எந்த காரணமும் இன்றி ஒருவர் உடலில் தொங்கவிட்டால் அல்லது அணிந்து கொண்டால் :- ஷரியத் சட்டப் பிரகாரம் ஷிர்க் அல்ல.

 

٢) மேற்கூறியவைகளை பாதுகாப்பு கவசம் என்ற நோக்கில் ஒருவர் உடலில் தொங்கவிட்டால் அல்லது அணிந்து கொண்டால் :- ஷரியத் சட்டப் பிரகாரம் ஷிர்க் அல்ல.

 

٣) மேற்கூறியவைகள் சுயமாக பாதுகாக்கும் என்ற நோக்கில் ஒருவர் உடலில் தொங்கவிட்டால் அல்லது அணிந்து கொண்டால் :- ஷரியத் சட்டப் பிரகாரம் ஷிர்க் ஆகும்.

 

٤) கொரோனா போன்ற தொற்று நோய்களை தடுக்கும் நோக்கிலும் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் முகத்தில் மாஸ்க் அணிவதும். இஸ்லாமிய முறைப்படி ஷைத்தான் தீண்டாமல் இருக்க நூல் அல்லது நாடா அல்லது திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான துஆக்களை எழுதி அவைகளை அணிவதும். ஷரியத் சட்டப் பிரகாரம் இவ்விரண்டும் ஷிர்க் அல்ல.

 

٥) வீடுகளுக்கும் கடைகளுக்கும் சுற்று மதில்கள், வீட்டின் கதவுகள், கூரைகள் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பதும். சூனியம் தீண்டாமல் இருக்க வீடுகளிலும் கடைகளிலும் திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான துஆக்களை எழுதி அவைகளை பாதுகாப்பு கவசமாக வைத்திருப்பதும். ஷிரியத் சட்டப் பிரகாரம் இவ்விரண்டும் ஷிர்க் அல்ல என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

5) கேள்வி :- தாயத்து ஷிர்க் என்று பொதுவாகக்கூறிய ஹதீஸ்களை நீங்கள் மறுக்க முற்படுகிறீர்களா?

 

பதில் :- ஹதீஸ்களை மறுப்பதை விட்டும் அல்லாஹ் எங்களை பாதுகாப்புக்காக. தாயத்து பல கோணங்களில் உள்ளது என்பதை பற்றி முன்பு கூறப்பட்டுள்ளது. தாயத்து ஷிர்க் என்று இடம் பெறும் ஹதீஸ்களை மூலாதாரமாக வைத்துப் பார்க்கும் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்த தாயத்து. அதாவது பாதுகாப்பு கவசம் என்னவெனில் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி சுயமாக இந்த தாயத்து பாதுகாக்கும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்ட அனைத்தும் ஷிர்க் இணைவைப்பாகும். அது அல்லாத வேறு நோக்கங்களுக்காக கட்டமைக்கப்பட்ட திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்தும் அது அல்லாத தாயத்து பாதுகாப்பு கவசங்களும் எக்காலத்திலும் ஷிர்க் ஆகாது.

 

مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் ஷிர்க் செய்து விட்டான்.

 

ஆதாரம் :- ஆதாரம் அஹ்மது 17442, 17404

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயத்து ஷிர்க் என்று பொதுவாக கூறினாலும். தாயத்துக்களிலில் அனுமதிக்கப்பட்ட தாயத்தும் உண்டு என்பதாக. திருக்குர்ஆன் 12:93 இன்னும் அபூதாவூத் 3662, திர்மிதி 3892 போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. இது சம்பந்தமான ஹதீஸ்களும் ஆதார எண்களும் பின்னர் பதிவிடப்படும். மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயத்தை பொதுவாக தடை செய்தது போல இன்னும் சில விஷயங்களையும் தடை செய்துள்ளார்கள். அவைகளை பின்வருமாறு பாருங்கள்.

 

نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم عَنِ النَّذْرِ وَقَالَ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ

 

நேர்ச்சை செய்வதை பொதுவாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

 

ஆதாரம் :- புஹாரி 6608, 6693

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக நேர்ச்சை செய்வதை தடை செய்தாலும். நேர்ச்சைகளில் அனுமதிக்கப்பட்ட நேர்சைகளும் உண்டு என்பதாக. திருக்குர்ஆனில் 2:270, 76:7, 22:29, இடம் பெற்றுள்ளது. மேலும்

 

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறானோ அவன் ஷிர்கு செய்து விட்டான்.

 

ஆதாரம் :- அபூ தாவூத் 3251

 

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்பவன் ஷிர்கு செய்து விட்டான் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக கூறினாலும். அல்லாஹ் அல்லாதவர்கள் மீது அனுமதிக்கப்பட்ட சத்தியமும் உண்டு என்பதாக திருக்குர்ஆனில் 2:225, 5:89, இடம் பெற்றுள்ளது.

 

இவைகளை கூர்ந்து கவனியுங்கள். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக ஷிர்க் என்றோ அல்லது தடை என்றோ இடம் பெரும் சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு. அது சம்பந்தமாக இடம் பெறும் அனைத்தும் ஷிர்க் அல்லது தடை என்று கூற முற்படுபவர்கள், இஸ்லாத்தின் பார்வையில் மடயர்களாகும். மேலும் நேர்ச்சை விடயமாக இருந்தாலும் சரி சத்தியம் விடயமாக இருந்தாலும் சரி. தாயத்து விடயமாக இருந்தாலும் சரி. அவைகள் திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருந்தால் அதற்கு பூரன அனுமதி இஸ்லாத்தில் உண்டு. அதற்கு மாற்றமாக இருந்தால் அதற்கு அனுமதி இல்லை. இதைதான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக தடை என்றும் ஷிர்க் என்றும் சில ஹதிஸ்களில் சுற்றிக் காட்டியுள்ளார்களே அன்றி வேறில்லை.

 

6) கேள்வி :- ஷிர்க் அல்லாத தாயத்துக்களை தொங்க விடலாமா?

 

பதில் :- ஷிர்க் அல்லாத தாயத்துக்களுக்கு துஆ” ” தஹ்வீஸ் போன்ற பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. இது போன்ற தாயத்துக்கள் திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருந்தால் தாராளமாக அவைகளை தொங்க விடுவதில் எவ்வித குற்றமும் இல்லை. வீட்டுக்கு கதவுகள் பாதுகாப்பாக இருப்பதை போல உடலுக்கு திர்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான இறைவனின் வார்த்தைகள் அதாவது துஆ” தஹ்வீஸ்” தாயத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்துக்கள் எக்காலமும் ஷிர்க் ஆகாது அவைகளை தொங்க விடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

 

குர்ஆன் கூறுகிறது “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று நபி யூசுப் அலை அவர்கள் கூறினார்). சூரா யூசுப் ஆயத் 93

 

குறிப்பு :- கண்பார்வை இழந்த நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பறக்கத்தான ஆடையை முகத்தில் போட்ட பின்னர் கண்பார்வை மீண்டும் கிடைத்து விட்டது. இது போன்று தான் ஷைத்தானின் தீண்டுதல் கண்திருஷ்டி போன்ற தீயசக்திகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலிருந்து துஆக்களை அது அல்லாத மந்திரங்களை எழுதி அவைகளை தஹ்வீஸ் (தாயத்தாக) கழுத்தில் தொங்கவிட்டால் தீயசக்திகள்” அகண்டு விடும். நம்மை நெருங்க விடாமல் அந்த துஆக்கள் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் என்ற கருத்துக்களை நம்மால் காணமுடிகிறது.

 

7) கேள்வி :- தாயத்து பொதுவாக ஷிர்க் என்பதாக ஹதீஸ்கள் கூறும் போது ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்தை எப்படி அனுமதிப்பது?

 

பதில் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப் பார்ப்பதை பொதுவாக தடை செய்தார்கள்” ஷிர்க் என்றார்கள். இது பற்றி ஸஹாபாக்கள் வினவிய போது ஷிர்குள்ள மந்திரங்களை கொண்டு ஓதிப் பார்ப்பது ஷிர்க். அது அல்லாத மந்திரங்களை கொண்டு ஓதிப் பார்ப்பது ஷிர்க் ஆகாது என்றார்கள். இவைகளை காரணமாக வைத்து தான் தாயத்து அறியாமை காலத்தில் வாழ்ந்த மக்கள் ஷிர்குள்ள மந்திரங்களையும் சிலைகளின் பெயர்களையும் எழுதி சுய பாதுகாப்பு தேடும் நோக்கில் தொங்க விட்டார்கள். அதனால் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை ஷிர்க் என்றார்கள். எனவே ஷிர்குள்ள தாயத்தை ஷிர்க் என்றார்கள் இவைகளை ஸஹாபாக்கள் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான துஆ” தஹ்வீஸ்” போன்ற தாயாத்துக்களை தொங்கவிட்டு இறைவனிடம் பாதுகாப்பு தேடி வந்துள்ளார்கள். மேலும் இவ்வாறு தேடுவதில் எவ்வித குற்றமும் இல்லை அவைகள் ஷிர்க் ஆகாது. அவைகளுக்கு இஸ்லாம் பூரண அனுமதி அளித்துள்ளது என்ற கருத்துக்களையும் சத்திய ஸஹாபாக்கள் உறுதியாகக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

عن عائشة رضي الله عنها أنها قالت التمائم ما علق قبل نزول البلاء، وما علق بعده فليس بتميمة

 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தமீமத்து (தாயத்து) பற்றிக் கூறினார்கள். பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்பு அதை தொங்கவிடுவற்கு தமீமத்து (தாயத்து) என்பதாக கூறப்படும். மேலும் (பலாய் முஸீபத்துக்கள்) இறங்கியதற்கு பின்னர் அதை தொங்கவிடுவதற்கு தமீமத்து (தாயத்து) என்பதாக கூறப்படமாட்டாது.

 

ஆதாரம் :- பைஹகி, ஹாகிம்” முஸ்தத்ரக் 4/217

 

குறிப்பு :- (சோதனை) பலாய் முஸீபத்துக்கள் இறங்கியதற்கு முன்பே ஜாஹிலியத்து மக்கள் சிலைகளின் பெயர்களை எழுதி அவைகளை சுய பாதுகாப்பு என்ற நோக்கில் அவைகளை தொங்கவிடுவார்கள். இதற்கு தமீமத்து (தாயத்து) என்பதாக கூறப்படும். இதைத்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். மேலும் (சோதனை) பலாய் முஸீபத்துக்கள் இறங்கியதற்கு பின்னர் (நோய்க்காக) வேண்டி தொங்கவிடுவதற்கு தமீமத்து (ஷிர்குள்ள தாயத்து) என்பதாகக் கூறப்படமாட்டாது. ஒரு வேளை தமீமத்து (தாயத்து) என்பதாக மக்கள் பொதுவாக கூறினாலும் அவைகள் திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலிருந்தால் அதை தாராளமாக தொங்கவிடலாம் அதில் எவ்வித குற்றமும் இல்லை என்ற கருத்துக்களை நம்மால் காண முடிகிறது.

 

عن عائشة رضي الله عنها قالت لا بأس بتعليق التعويذ من القرآن قبل نزول البلاء وبعد نزول البلاء‏

 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் (அல்லது) பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ (பாதுகாப்பிற்காக வேண்டி) திருக்குர்ஆனிலிருந்து (தாயத்தை) தொங்கவிடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

ஆதாரம் :- கன்ஷுல் உம்மால் 28413

 

عن أنس رضي الله عنه قال لا بأس بتعليق التعويذة من القرآن قبل نزول البلاء وبعد نزول البلاء

 

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் (அல்லது) பலாய் முஸீபத்துக்கள் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ (பாதுகாப்பிற்காக வேண்டி) திருக்குர்ஆனிலிருந்து (தாயத்தை) தொங்கவிடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

ஆதாரம் :- தாரமீ 7050

 

كان عبد الله بن عمرو رضي الله عنه يعلمها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவை) அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு இதை எழுதி அவைகளை (தாயத்தாக) தொங்கவிட்டார்கள்.

 

ஆதாரம் :- அபூ தாவூத் 3662, திர்மிதி 3892

 

كان عبد الله بن عمرو رضي الله عنه يعلمُهنَ من عقل من بنيه ومن لم يعقل كتبها فى صك ثم علقها فى عنقه

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவை) அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அவர்களுடைய பிள்ளைகளில் விளங்கி கொள்ளக்கூடியவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தார்கள். விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு இதனை எழுதி அவர்களுடைய கழுத்தில் (தாயத்தாக) தொங்கவிட்டார்கள்.

 

ஆதாரம் :- அபூ தாவூத் 3663

 

عن مجاهد رضي الله عنه كان يكتب للناس التعويذ فيعلقه عليهم

 

(ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கில் வரும்) மனிதர்களுக்கு (திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலுள்ள) பாதுகாவளை எழுதி அவைகளை (தாயத்தாக) அவர்களுடைய (கழுத்தில்) தொடங்கவிடக் கூடியவர்களாக முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆகியிருந்தார்கள்.

 

ஆதாரம் :- இப்னு அபீ ஷைபா 2401

 

8) கேள்வி :- தாயத்து பற்றி தாபியீன்கள் மற்றும் இமாம்களின் நிலைப்பாடுகள் என்ன?

 

பதில் :- சிறுபிள்ளைகள் மீதும் நோயாளிகள் மீதும் பாதுகாப்புக்காக வேண்டி ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்துக்களை தொங்க விடுவதில் எவ்வித குற்றமும் இல்லை என்பதாக தாபியீன்கள் மற்றும் பல இமாம்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

 

عن سعيد بن المسيب رحمه الله أنه كان يأمر بتعليق القرآن وقال لا بأس به

 

ஸயீத் இப்னு முஸையிப் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். நிச்சயமாக திருக்குர்ஆனிலிருந்து (உண்டான தாயத்தை) தொங்க விடும்படி ஏவினார்கள். மேலும் (இவ்வாறு தொங்க விடுவதில்) எவ்வித குற்றமும் இல்லை என்பதாக குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

ஆதாரம் :- பைஹகி 19612

 

قال بن حيان رحمه الله وقال القرطبي رحمه الله وقال مالك رحمه الله لا بأس بتعليق الكتب التي فيها أسماء الله عز وجل عن عطاء بن السائب قال لا بأس أن يعلق القرآن

 

அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும் அவனின் பெயர்களிலிருந்தும் (தாயத்து) ஆகியிருந்தால் அதில் குற்றமில்லை என்பதாக இமாம் இப்னு ஹய்யான் ரஹ்மத்துல்லாஹ் இமாம் குர்துபீ ரஹ்மத்துல்லாஹ் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அதா இப்னு ஸாயிப் போன்றவர்களும் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

ஆதாரம் :- இப்னு அபீ ஷைபா 24016

 

عن يونس بن حبان رحمه الله قال سألت أبا جعفر محمد بن علي بن أبي طالب رحمه الله أن أعلق التعويذ فقال إن كان من كتاب الله أو كلام عن نبي الله فعلقه واستشف به ما استطعت

 

ஜவ்பர் இப்னு முஹம்மது இப்னு அலி ரஹ்மத்துல்லாஹ் அவர்களிடம் பயத்திற்காக வேண்டி (தாயத்து) தொங்க விடுவது பற்றிக் கேற்கப்பட்டது” அதற்கு அவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்தும் அவனுடைய பேச்சிலிருந்தும் இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்லிலிருந்தும் அந்த (தாயத்து) ஆகியிருந்தால் அதை கொண்டு நோய் நிவாரணி தேடிக் கொள்ளுங்கள் என்பதாகக் கூறினார்கள்.

 

ஆதாரம் :- இப்னு ஹிப்பான் 3245, ஜாத் அல் மஆத் 4/326

 

سعيد بن المسيب رحمه الله وابن سيرين رحمه الله وعطاء رحمه الله وأبو جعفر الباقر رحمه الله ومالك رحمه الله وأحمد رحمه الله وابن عبد البر رحمه الله والقرطبي رحمه الله وابن تيمية، وابن القيم رحمه الله وابن حجر العسقلاني رحمه الله وقولهم أن التعليق الجائز هو ما كان بعد نزول البلاء

 

(சோதனை) பலாய் முஸீபத்துக்கள் இறங்கியதற்கு பின்னர் (திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்தை) தொங்கவிடுவதில் (எவ்வித குற்றமும் இல்லை) அது கூடும் என்பதாக இமாம் ஸயீத் இப்னு முஸையிப் ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் அதாஆ ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் அபூ ஜஃபர் அல் பாகிர் ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹ் மேலும் அப்துல் பர்ரு ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் குர்துபீ ரஹ்மத்துல்லாஹ் மேலும் வஹாபிஷ இமாம் இப்னு தைமிய்யா மேலும் இமாம் இப்னு கய்யூம் ரஹ்மத்துல்லாஹ் மேலும் இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

ஆதாரம் :- அஹ்காம் அல் ருக்கா வத்தமாயிம் 253

 

يجوز تعليق التمائم وهي العوذة التي تعلق على المريض والصبيان وفيها القرآن وذكر الله تعالى اذا احرز عليها جلدا ويجوز تعليقها على المريض والصحيح خوفا من المرض عند العلماء

 

சிறுபிள்ளைகள் மீதும் நோயாளிகள் மீதும் பாதுகாப்புக்காக வேண்டி தாயத்தை தோலுடன் சேர்த்து அல்லது அவர்கள் மீது அதை தொங்கவிடுவது கூடும். அவைகள் திருக்குர்ஆன் வசனங்களில் இருந்தும் அல்லது அல்லாஹ்வின் திக்ருகளில் இருந்து ஆகியிருக்க வேண்டும். அவைகளை நோயினால் பயம் ஏற்பட்டவர்களுக்கு (தாயத்தாக தொங்கவிடலாம்) என்பது உலமாக்களின் சரியான சொல்லாகும்.

 

ஆதாரம் :- ஜாத அல் முஸ்லிம் 3/10

 

9) கேள்வி :- ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான தாயத்தை தொங்க விடுவதில் குற்றமில்லை என்று வைத்தாலும் அவைகளை ஏன் உடலிலும் மற்றும் வீடுகளிலும் ஏன் தொங்க விடுகிறார்கள்? இதன் முக்கிய நோக்கம் என்ன?

 

பதில் :- பாதுகாப்புக்கள் பல கோணங்களில் ஏற்பட்டாலும் அதன் எதார்த்தத்தில் படைப்பினங்களை கொண்டு இறைவனே பாதுகாக்கிறான் என்பதே முஸ்லிம்களின் ஆலமான நம்பிக்கையாகும். உதாரணமாக யுத்தம் செய்யும் போது கவசங்கள் பாதுகாப்பாக உள்ளன. மேலும் வீட்டை சூழவுள்ள பகுதிகளில் சுற்று மதல்கள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் வீடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டு கதவுகள் பாதுகாப்பாக உள்ளது, மேலும் கடைகளிலுள்ள பொருட்களுக்கு கடைச் சுவர்கள் கதவுகள் மற்றும் கூரைகள் பாதுகாப்பாக உள்ளது. மேலும் நவீன தொற்று நோய்கள் வைரஸ்களை தடுக்க அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் முகக்கவசம் பாதுகாப்பாக உள்ளது, இவைகளுக்கு வெவ்வேறு விதமான பெயர்கள் இருந்தாலும் பொதுவாக பாதுகாப்பு கவசம் (தாயத்து) என்ற பொருள் கொள்ளப்படும். இதே போன்று தான் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான்கள் சிறுபிள்ளைகளை தீன்டாமல் இருக்க, மேலும் சூனியத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ தீங்கு ஏற்பட்டு விட்டால்” அவைகளை ஆரம்பமாக ஷிர்க் அல்லாத திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான மந்திரங்களை கொண்டு சூனியத்தின் மூலம் சூழ்ச்சி செய்யும் ஷைத்தான்களை விரட்டி அடிக்க வேண்டும். அதன் பின்னர் அவைகள் மீண்டும் வராமல் இருக்க பாதுகாப்பு” துஆக்கள் மந்திரங்களை ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும். இல்லை என்றால் அவைகளை எழுதி பாதுகாப்பிற்காக கழுத்தில் தொங்க விடலாம் அல்லது அவைகளை எழுதி வீடுகளில் கட்டித் தொங்க விடலாம். அல்லது அவைகளை குப்பியில் அடைத்து நம் வீட்டு எல்லைக்குள் புதைத்து விடலாம். இவ்வாறு செய்வதால் சூனியக்காரர்களின் சூழ்ச்சி” கண்களுக்கு தெரியாத தீயசக்தி” ஷைத்தான்களின் அட்டூழியம் செயலிழந்து விடுகிறது. இவைகளை ஷிர்க் என்று கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடையர்களாகும்.

 

إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ لَنْ يَزَالَ مَعَكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ

 

(இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்); நீங்கள் படுக்கைக்கு வந்து, (சூரா பகராவில் உள்ள) ஆயதுல் குர்ஸியை (2:255) ஓதினால், அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவளன் உம்முடன் இருந்து கொண்டே இருப்பார், மேலும் காலை வரை உம்மை ஷைத்தான் நெருங்க மாட்டான்.

 

ஆதாரம் புஹாரி 5010

 

குறிப்பு :- சூனியத்தின் மூலம் ஷைத்தான் மனித உடலில் தீங்கு ஏற்படுத்தினால் அதன் மூலம் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பது பற்றி திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சுருக்கமாக ஆரம்பத்தில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. சூனியத்தின் மூலம் ஷைத்தான் வீடுகளுக்கு தீங்கு ஏற்படுத்தினால் அதன் மூலம் பலவிதமான விபரீதங்கள் ஏற்படும். அவைகளில் சிலவற்றை பார்க்கலாம். அந்த வீடுகளிலில் வசிப்பவர்களுக்கு அதிக கோபம் வெளிப்படும். மேலும் எந்த சம்பந்தமும் இல்லாமல் பிரச்சினை பல கோணங்களில் ஏற்படும். மேலும் பல விதமான நோய்கள் மாறிமாறி அவர்களுக்கு ஏற்படும். மேலும் நிம்மதி சந்தோஷம் முழுமையாக அற்ற நிலையில் காணப்படும். மேலும் தீயசக்தி” ஷைத்தானின் ஊசலாட்டம் அட்டூழியம் அதிகரித்து காணப்படும். மேலும் அந்த வீட்டுகளில் வசிப்பவர்கள் இருந்தும் இருளாக பாழடைந்ததாக வெளித்தோற்றத்தில் அந்த வீடுகள் மாயத் தோற்றம் ஏற்படுத்தும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.