காதலர்களுக்கும் ஏழைகளுக்கும் (காஃபிர்) தீயவர்களுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

431

காதலர்களுக்கும்
ஏழைகளுக்கும் (காஃபிர்)
தீயவர்களுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

 

காதல் திருமணம் செய்து வைக்கலாமா?

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ جَارِيَةً بِكْرًا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ لَهُ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ كَارِهَةٌ فَخَيَّرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கன்னிப் பெண் வந்து, அவள் விரும்பாத நிலையில் அவளின் தந்தை அவளுக்குத் திருமணம் முடித்து வைத்து விட்டதாகக் கூறினாள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணிடம் நீ விரும்பினால் வாழ்ந்து கொள். இல்லையேல் திருமணத்தை முறித்துக் கொள் எனக்கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1875 அபூதாவூத் 2096 அஹ்மது 2469

 

♦️திருமணம் செய்வதற்கு ஆண் பெண்ணை பார்க்க வேண்டும். பெண் ஆணை பார்க்க வேண்டும். அவர்கள் இருவரும் (காதல் கொண்டால்) விரும்பினால் தான் திருமணம் செய்து வைக்கப்படும். இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கப்பட்ட மாட்டாது. அதையும் மீறி பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்தால் அந்த திருமணத்தை திருமண தம்பதிகள் முறித்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ نَظَرْتَ إِلَيْهَا، فَإِنَّ فِي عُيُونِ الْأَنْصَارِ شَيْئًا؟ قَالَ قَدْ نَظَرْتُ إِلَيْهَا

 

ஒரு மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, நான் அன்சாரிகளில் ஒரு பெண்ணை திருமணம் முடிக்கப்போகிறேன்” என்றார். அவரிடம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டீரா? ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உள்ளது” என்றார்கள். அதற்கு அந்த மனிதர், அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டேன்.

 

அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1424 நஸாயி3 234

 

ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்! ஆரம்பத்தில் அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆண் திருமணம் செய்யும் நோக்கில் பெண் வீட்டார்களின் அனுமதியுடன் பெண்ணைப் பார்த்து, இருவரும் காதல் கொண்டால், விரும்பினால் தாராளமாக திருமணம் செய்து வைக்க முடியும். அதே போன்று எதார்ச்சியாக ஏதோ ஓர் இடத்தில் ஒரு பெண்ணை பார்த்து அவள் மீது காதல் கொண்டு அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டால் மறுகணம் அவள் குடும்பத்தை நாடி பெண்ணின் விருப்பத்தை கேட்க வேண்டும். அவளும் காதல் கொண்டு சம்மதம் தெரிவித்தால், தாராளமாக திருமணம் செய்து வைக்க முடியும். இது போன்ற காதல் திருமணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

திருமணம் செய்து கொள்ள பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் இல்லை எனினும் அதனை பெறுவது அவசியமாகும்.

 

فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ

 

குர்ஆன் கூறுகிறது (அப்பெண்களை) அவர்களின் குடும்பத்தின் அனுமதியுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். சூரா நிஸா ஆயத் 25

 

♦️பெண் மாப்பிள்ளை பெற்று வளர்த்த தாய் தந்தை இருவர்களின் பூரண அனுமதியுடன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஆண்மையுள்ள மாப்பிள்ளையை குறித்து மேற்கூறிய இறைவசனம் பேசுகிறது.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا صَغِيرَةٌ فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ

 

அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் (உங்களை விடவும்) சிறியவள்” என்று கூறி திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்கள். அதன் பின்னர் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெண் கேட்க அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.    

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 3221

 

வேறு சில அறிவிப்புக்களில் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வின் உத்தரவை எதிர்த்து காத்திருக்கிறேன் என்றும் இடம் பெற்றுள்ளது.

 

♦️இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பெண் மாப்பிள்ளைகளை பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு அந்த பெண் பிள்ளையை யாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். யாருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று தீர்மானம் செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

திருமண விஷயத்தில் பெற்றோர்கள் நடுநிலையாக சிந்தித்து செயல் பட வேண்டும்

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் பொருந்திக் கொள்ளும் மார்க்கம் மற்றும் குணத்தைக் கொண்டவர் உங்களிடம் பெண் கேட்டால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு செய்யாவிடில் பூமியில் சோதனையும், பெரிய குழப்பமும் ஏற்பட்டுவிடும்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1084 இப்னு மாஜா 1967

 

♦️மாற்று மத சகோதரர் இஸ்லாத்தை முழுமையாக ஏற்ற நிலையில் இருந்தால் அல்லது மார்க்க குணமுள்ள வாலிபர் உங்கள் பெண் பிள்ளையை திருமணம் செய்யும் நோக்கில் காதல் கொண்ட நிலையில் பெண் கேட்டு வந்தால். அவர்களுக்கு உங்கள் பெண் பிள்ளையை திருமணம் செய்து வையுங்கள்.

 

உங்களுடைய வாலிப பெண் பிள்ளைகளை ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தயங்காதீர்கள்

 

عَنْ سَهْلٍ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا ؟ قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ قَالَ ثُمَّ سَكَتَ فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا؟ قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لَا يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لَا يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لَا يُسْتَمَعَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الْأَرْضِ مِثْلَ هَذَا

 

ஒரு (பணக்கார) மனிதர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் சென்றார். அப்போது அவர்கள் (தம் ஸஹாபாக்களிடம்), ‘இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு திருமணம் முடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினார்கள். பின்னர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பின்னர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு திருமணம் முடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர் என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விடவும்) இந்த ஏழை (மனிதரே!) மேலானவர் எனக்கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸஹ்ல் இப்னு ஸஹ்து ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5091, 6447

 

♦️அன்புக்குரிய பெற்றோர்களே! பெண் பிள்ளைகளின் திருமண விஷயத்தில் தன்னுடைய வரட்டு கௌரவித்தை பார்க்காதீர்கள். உங்களது விருப்பம் திருமணத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதை விட வாழ்நாள் முழுவதும் திருமண வாழ்க்கையில் ஈடுபட காத்திருக்கும் பெண்னின் விருப்பம் பன்மடங்கு முக்கியம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். மார்க்க குணமுள்ள வாலிபன் உங்கள் பெண் பிள்ளையை விரும்பி திருமணம் செய்ய முன் வந்தால் அவன் ஏழையாக இருந்தாலும் சரி இருவரும் விருப்பம் தெரிவித்தால் தாராளமாக திருமணம் செய்து வையுங்கள்.

 

காஃபிர்களுக்கும் தீயவர்களுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

 

 

اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது (கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது. சூரா நூர் ஆயத் 3

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَطَبَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ فَقَالَتْ وَاللَّهِ مَا مِثْلُكَ يَا أَبَا طَلْحَةَ يُرَدُّ، وَلَكِنَّكَ رَجُلٌ كَافِرٌ، وَأَنَا امْرَأَةٌ مُسْلِمَةٌ، وَلَا يَحِلُّ لِي أَنْ أَتَزَوَّجَكَ فَإِنْ تُسْلِمْ فَذَاكَ مَهْرِي، وَمَا أَسْأَلُكَ غَيْرَهُ فَأَسْلَمَ فَكَانَ ذَلِكَ مَهْرَهَا

 

அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உம்மு ஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களைக் கேட்டார். அதற்கு உம்மு ஸுலம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உம்மைப் போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள மறுக்க முடியாது. ஆனால் நீர் காஃபிராக இருக்கிறீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். எனவே உம்மை மணந்து கொள்வது எனக்கு ஹலால் இல்லை. நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே எனது மஹராகும். வேறு ஒன்றும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அதுவே அவரது மஹராக ஆனது.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 3341

 

♦️இணைவைப்பில் மூழ்கி இருக்கும் (காஃபிர்) மாற்று மத வாலிபன் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் அல்லது மார்க்க குணமற்ற, கெட்ட நடத்தையுள்ள வாலிபன் திருந்தாத நிலையில் தன் பெண் பிள்ளையை விரும்பி திருமணம் செய்ய முன் வந்தால்! அவனுக்கு திருமணம் செய்து வைப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிக்கிறது. பெண் பிள்ளை அவன் மீது ஆசைப்பட்டாலும் சரியே! மேலும் அத்துமீறி இருவரும் பெற்றோர்களை உதறித் தள்ளி விட்டு மனவேதனைப் படுத்திவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் இருவரும் இஸ்லாத்தின் பார்வையில் மாபெரும் குற்றவாளிகளாகவே பார்க்கப்படுவார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அடுத்த தொடரில் பெற்றோர்களின் கண்ணீரும் காதல் திருமணம் என்ற தலைப்பை பார்வையிடலாம். இன்ஷா அல்லாஹ்

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.