சிந்தித்தால் சந்திப்பாய்

310

சிந்தித்தால் சந்திப்பாய்

 

கடவுள் உன்னை உருவாக்கியவனே தவிர நீ உருவாக்கிய ஒன்று எக்காலமும் கடவுளாக இருக்க முடியாது

 

♦️கடவுள் சர்வலோகம் பிரபஞ்சத்திலுள்ள எல்லா வஸ்துக்களையும் படைத்தவன், அவன் பரிபாலிப்பவன். படைப்பாளி படைப்புகளை உருவாக்க முடியும் அதாவது படைக்க முடியும், படைக்கப்பட்ட படைப்புக்கள் படைப்பாளியை உருவாக்க முற்படுவது முற்றிலும் தவறு அது சிலர்களின் தவறான சிந்தனையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. மேலும் கடவுளால் படைக்கப்பட்ட படைப்புக்கள் விசித்திரமானது ஒவ்வொரு படைப்புக்களும் வெவ்வேறு கோணங்களில் தோற்றம் அளிக்கிறது, தோற்றம் அளிக்கும் படைப்புக்களில் ஆச்சரியம் அளிக்கும் படைப்புக்களும் ஆச்சரியம் அளிக்காத சில படைப்புக்களும் உள்ளன. உதாரணமாக

 

♦️ஜின் இனத்தைச் சேர்ந்த தீயசக்திகள் ஷைத்தான்களுக்கு கடவுள் கொடுத்த சில ஆற்றல்களைக் கொண்டு மனித இனத்திலுள்ள பலரை அவைகள் வழிகெடுக்கிறது குறிப்பாக ஆச்சரியம் ஏற்படும் சில விஷயங்களை அது செய்கிறது. இதனை தவறாக புரிந்து கொண்ட சில மனிதர்கள் அந்த ஷைத்தான்களை கடவுள்களாக எடுத்துக் கொண்டனர், மேலும் உருவம் அமைத்து அவைகளை வணங்கி வழிபடுகின்றனர், இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்! ஷைத்தான்களின் தீய மாய மந்திரங்களை கற்றுக் கொண்ட சூனியக்காரர்களையும் குறிப்பாக கடவுளின் அனுமதி கொண்டு உலக மக்களை சீர்திருத்தம் செய்ய வந்த இறைத்தூதர்களையும், மேலும் கடவுளை வணங்கி வழிபட்டு இறைநெக்கத்தை பெற்ற நல்லடியார்களையும், இவர்களின் செயல்பாடுகள் இவர்கள் செய்யும் சில ஆச்சரியம் அளிக்கும் அற்புதங்களை தவறாக புரிந்து கொண்ட சில மனிதர்கள், காலப் போக்கில் அற்புதம் செய்த மனிதர்களை கடவுளின் வரம் பெற்றவர்கள் என்றும், கடவுளின் குமாரர்கள் மகன்கள் என்றும், மனித உருவில் உருவெடுத்த கடவுள் என்றும் தன் மனோ இச்சை படி சில பல கதைகளை கூறியவாறு பல கடவுள்களை தன் இஷ்டப்படி உருவாக்கி பல கோணங்களில் சிலை செய்து வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படை தெரியாத பிற்கால சந்ததிகள் அவர்களின் மூதாதையர்கள் கூறிய கதைகளை பின்பற்றிய காரணத்தால் சிலைகளையும் பல உருவங்களையும் வணங்கி வழிபடத் தொடங்கினார்கள்…

 

♦️சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள் கடவுள் நம்மை உருவாக்கியவன் அப்படி இருக்க நாம் உருவாக்கும் கற்சிலைகள் அது அல்லாதவைகள் எப்படி கடவுள்களாக இருக்க முடியும், கடவுள் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாப்பவன் ஆனால் இன்று சிலைகளை மனிதர்கள் பாதுகாக்கிறனர், மேலும் பாதுகாப்பான இடங்களில் வைக்கின்றனர், இவைகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. படைப்பாளி படைப்புக்களை பாதுகாக்கிறான், மேலும் படைப்புக்கள் படைப்பாளியின் நாட்டத்தை கொண்டு ஏனைய படைப்புக்களை பாதுகாக்கிறது, இதில் எந்த ஒரு ஆச்சரியக்குறியும் இல்லை, ஆனால் படைப்பாளியை மனித படைப்புக்கள் பாதுகாக்கிறது, மேலும் படைப்பாளியை மனித படைப்புக்கள் கற்சிலைகளாக செய்து வேரு சில உருவ படங்களாக செய்து ஓர் இடத்தில் அவைகளை முடக்கி வைக்கிறது என்பது ஆச்சரியக்குறியே அன்றி வேறில்லை.

 

♦️கடவுள் என்பவன் படைத்தவன் படைப்பாளி அவன் சக்தி மிக்கவன் அவன் தான் படைப்பினங்களை படைத்தான். அவன் படைத்த படைப்பினங்கள் எக்காலமும் படைப்பாளியை படைக்க முடியாது அதாவது கற்சிலைகளாக அது அல்லாத உருவங்களாக படைப்பாளியை கடவுளை உருவாக்க முடியாது. கற்சிலைகள் அது அல்லாத மனித சிந்தனைக்கு எட்டும் உருவங்கள் அனைத்தும் படைப்பினங்களை சார்ந்தது. மேலும் அழிந்து போக்கக்கூடிய சுய சக்தி அற்ற இவ்வாறான படைப்புகளை கடவுள் என்று கூறியவாறு அவைகளை வணங்கி வழிபடுவது இம்மையிலும் மறுமையிலும் கைசேதத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டவைதாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்” என்றும் கூறினார்.

சூரா அன்கபூத் ஆயத் 17

 

♦️அல்லாஹ் என்பவன் படைத்தவன் படைப்பாளி கடவுள் அவன் தான் படைப்பினங்களை படைத்தான். குறிப்பாக மனிதர்களை அழகிய உருவங்களாக படைத்து அனவே உயிர் பெறச் செய்தான். ஆனால் மனிதர்களில் சிலர் உயிர் அற்ற கற்சிலைகளாக உருவப் படங்களாக தன் இஷ்டப்படி பொய்யான பல கடவுள்களை உருவாக்கி அவைகளை வணங்கி வழிபட்டு வருகின்றனர். எனவே அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. கற்சிலைகள் உருவப் படங்கள் இவையெல்லாம் உயிர் அற்ற பொருள். அதற்கு சுய சக்தி கிடையாது என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

அல்லாஹ் என்பவன் யார்?

 

எல்லா படைப்புக்களையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனை உலக முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள். அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல்லாகும். அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன். அவன் தனித்தவன், ஒருவன், இறைவன், கடவுள், படைத்தவன், படைப்பாளி என்றெல்லாம் பல கோணங்களில் கூறப்படும். மேலும் அல்லாஹ் என்ற சொல்லில் ஆண் பால் பெண் பால் கிடையாது மேலும் ஒருவன் என்று ஒன்றை மட்டும் குறிக்குமே தவிர பன்மையை குறிக்காது.

 

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள் அல்லாஹ் ஒருவன்தான்.

சூரா இஃலாஸ் ஆயத் 1

 

♦️அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்புக்கள் உண்டு. அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் ஒருவன் என்ற அர்த்தத்தையே தரும். அவை பின்வருமாறு (الله) அல்லாஹ் ஒருவனை குறிக்கும் (لله) லில்லாஹ் ஒருவனை குறிக்கும் (له) லஹு ஒருவனை குறிக்கும் (ه) ஹு ஒருவனை குறிக்கும். இதனால் திருக்குர்ஆனில் அல்லாஹ் ஒருவன்தான் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

اَللّٰهُ الصَّمَدُ ‏

 

குர்ஆன் கூறுகிறது (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன்.

சூரா இஃலாஸ் ஆயத் 2

 

சர்வ படைப்புக்களுக்கும் அவன்பால் தேவையுள்ளது. ஆனால் படைப்புக்களை படைத்த படைப்பாளி அல்லாஹ்விற்கு எந்த விதமான தேவைகளும் கிடையாது. அவன் படைத்த படைப்பினங்கள் அவனின் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை

 

لَمْ يَلِدْ  ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை.

சூரா இஃலாஸ் ஆயத் 3

 

படைப்பினங்களுக்கு பிறப்பு இறப்பு உண்டு ஆனால் படைப்பாளி அல்லாஹ்விற்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. ஆகவே அவனுக்குத் தகப்பனும் இல்லை சந்ததியும் இல்லை. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது பிறப்பால் இறப்பால் பின்னிப்பிணைந்த வண்ணம் மனித உருவில் உருவெடுக்கும் கடவுள்களை நாம் என்னவென்று வர்ணிப்பது.

 

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றும் இல்லை.

சூரா இஃலாஸ் ஆயத் 4

 

♦️அல்லாஹ் என்பவன் ஒருவன் அவனே படைப்பாளி அவனை தவிர உள்ள ஏனையவை அவனால் படைக்கப்பட்ட படைப்புக்களே அன்றி வேறில்லை. இந்த உலகத்தில் எந்த உருவங்களையெல்லாம் கடவுள் என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவைகளுக்கு அவன் ஒப்பானவன் கிடையாது. அவனை போன்று எதுவும் இல்லை, எப்பொருளும் இல்லை என்பதே ஆழமான இறைநம்பிக்கையாகும்.

 

♦️குறிப்பு :- சிலை வணக்கம், உருவ வணக்கம், நெருப்பு வணக்கம், கப்ரு வணக்கம் போன்ற பல கற்பனை கடவுள்களை உடைத்தெறியும் உன்னதமான மார்க்கம், அறிவுப்பூர்வமான மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

அல்லாஹ் யாவற்றையும் படைத்தவன்

 

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை “ஆகுக!” எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது.

சூரா பகரா ஆயத் 117

 

اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை “ஆகுக!” எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது.

சூரா யாஸீன் ஆயத் 82

 

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِىْ فَطَرَهُنَّ وَاَنَا عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

சூரா அன்பியா ஆயத் 56

 

சகல படைப்புக்களும் நம்முடைய கண்களுக்கு தென்படுவது கிடையாது. நம்முடைய கண்களுக்கு தென்படாத எத்தனையோ விதமான படைப்புகளை அல்லாஹ் படைத்து பரிபாலித்துக் கொண்டு இருக்கிறான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‏

 

குர்ஆன் கூறுகிறது அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.

சூரா ஸஜ்தா ஆயத் 7

 

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.

சூரா தீன் ஆயத் 4

 

♦️மனித வர்க்கத்தை அல்லாஹ் களிமண்ணைக் கொண்டு அழகிய ஓர் அமைப்பாக படைத்திருக்கிறான். அவர்களுக்கு ஏறாளமான அருட்கொடைகளையும் பகுத்தறிவையும் கொடுத்திருக்கிறான். எனவே அவர்களை ஏன் படைத்தான் அவர்களிடம் அல்லாஹ் எதிர்பார்ப்பது என்ன என்பதை திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

 

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

 

குர்ஆன் கூறுகிறது ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.

சூரா தாரியாத் ஆயத்

 

ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

 

குர்ஆன் கூறுகிறது இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே.

சூரா அன்ஆம் ஆயத் 2

 

அல்லாஹ் மனித வர்க்கத்தை அழிகிய அமைப்பில் படைத்தது மட்டுமின்றி பல அருட்கொடைகளையும் பகுத்தறிவையும் கொடுத்ததன் நோக்கம் அவனை வணங்க வேண்டும். அவனுக்கு அடிபணிய வேண்டும். அல்லாஹ் அல்லாத எந்த படைப்புக்களையும் வணங்கி வழிபட்டக் கூடாது. வணங்கத் தகுதியுள்ளவன் அவனை தவிர வேறு யாரும் இல்லை என்பதை மனிதர்கள் உணரவேண்டும். மேலும் ஏனைய படைப்புக்களும் அவனையே வணங்கி வழிபட்டு வருகின்றன.

 

وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰۤٮِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.

சூரா நஹ்ல் ஆயத் 49

 

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏

 

குர்ஆன் கூறுகிறது ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.

சூரா பனீ இஸ்ராயீல் ஆயத் 44

 

♦️சகல படைப்பினங்களும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து வணங்கி வழிபடுகின்றன. அவனை தஸ்பீஹ் துதி செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிகமான மனித ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மாய உலகில் அவனுக்கு மாறு செய்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை விட்டும் இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் பாதுகாப்பாக. ஆமீன்

♦️குறிப்பு :- அல்லாஹ் ஒருவன் அவன் தனித்தவன் அவனுக்கு இணையுமில்லை துணையுமில்லை. அவன் தேவையற்றவன். அவனே அனைவருக்கும் தேவை. அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவுமில்லை. அவனை போல் வேறொன்று இல்லை. அவன் எப்பொழுதும் எங்கும் இருக்கிறான். அவனுக்கு ஆரம்பமுமில்லை முடிவுமுமில்லை. அல்லாஹ் தான் எல்லாவற்றயும் படைத்து பாதுகாக்கிறான். அவனை முழுமையாக ஏற்ற நிலையில் வணங்கி வழிபடுங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.