தயம்மம் செய்வதன் விபரம் பகுதி 1

59

தயம்மம் செய்வதன் விபரம் பகுதி 1

 

  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌  وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌  وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌  مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 

 

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் குளிப்பு கடமையானவராக இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.

(அல்குர்ஆன் 📚 : 5:6) 

உளூ செய்வதற்காக வேண்டியும் குளிப்புக் கடமையானவர்கள் குளித்து கொள்வதற்காகவும் தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை என்றால் தூய்மையான மண்ணைக் கொண்டு தயம்மம் செய்து கொள்ளுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. 

 

தயம்மம் என்றால் என்ன?

 

♦️ தயம்மம் என்றால் உழு அல்லது குளிப்புக்குப் பதிலாக புழுதி மண்ணால் செய்யப்படும் தூய்மையாகும். உழு செய்து கொள்வதற்கோ, அல்லது கட்டாயமான குளிப்பை நிறைவேற்றிக் கொள்ளவோ தண்ணீரை உபயோகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நோய் கூடுதலாகி விடும் என அஞ்சினாலும் அல்லது தன்னிடமுள்ள தண்ணீரைக் கொண்டு மேற்படி உழூ குளிப்பு கடமைகளை நிறைவேற்றி விட்டால் தனக்கோ அல்லது தனது வாகனமாகிய பிராணிக்கோ குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் போகும்மெனப் பயந்தாலும் உரியவிலை கொடுத்தும் தண்ணீர் வாங்க முடியாவிட்டாலும் தயம்மம் செய்து கொள்ளலாம். தயம்மத்தால் புரியப்பட்ட வணக்கங்களைத் தண்ணீர் கிடைத்த பிறகு கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

 

காயத்திற்குரிய பிளாஸ்டர் அணிவது பற்றிய தெளிவு 

 

♦️ஒரு புண்ணின் மீது தண்ணீர் படாதிருக்கும் வண்ணம் பேணப்படுமானால் புண்ணில்லாத உருப்பைக் கழுவிய பின் அந்தப் புண்ணில் தண்ணீர் படாததற்காக தயம்மம் செய்யவேண்டும். அப்புண்ணின் உறுப்பைக் கழுவ வேண்டிய அதே நேரத்தில் தயம்மம் செய்ய வேண்டும். குளிப்பு கட்டாயமானவன் தயம்மத்தை முதலாவதாகவோ அல்லது குளிப்பை முதலாவதாகவோ செய்து கொள்ளலாம். உழுவின் பல உறுப்புக்களில் நீர் படக்கூடாத நிலையிருந்தால் அந்த உறுப்பைக் கழுவும் சமயம் அவ்விடத்தில் தயம்மம் செய்ய வேண்டும். தயம்மம் உடைய உறுப்பில் புண்ணிருந்தால் புளுதிக் கையை அதன் மீது தடவியாக வேண்டும். இனி புண்ணின் மீது பிளாஸ்டர் அல்லது பலகை வைத்துக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் உழு செய்தபின் அதை வைத்துக்கட்ட வேண்டும். அப்போது காயமில்லாத உறுப்பினங்களைக் கழுவியபின் பிளாஸ்டர் அல்லது பலகையின் மீது ஈரக்கையால் தடவ வேண்டும். உழு இல்லாத நிலையில் பட்டி வைத்துக் கட்டப்பட்டிருந்தால் அதன்மீது ஈரக்கையை தடவுவதோடு புண்ணின் காயம் சுகமான பின் அவன் தொழுத தொழுகைகளைத் திரும்பவும் தொழ வேண்டியதில்லை.  

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.