நபி முஹம்மத் ﷺ அவர்களின் நற்குணங்களும் இரக்கம் கருணை அன்பும்
நபி முஹம்மத் ﷺ அவர்களின் நற்குணங்கள்
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.
சூரா கலம் ஆயத் 4
عَنْ أَنَسِ بْنِ مَالِك رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணங்கள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6203, முஸ்லிம் 659, 2150, 2310, 2310
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ هَذِهِ الْآيَةَ الَّتِي فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا } قَالَ فِي التَّوْرَاةِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَحِرْزًا لِلْأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلَا غَلِيظٍ وَلَا سَخَّابٍ بِالْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ السَّيِّئَةَ بِالسَّيِّئَةِ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَيَفْتَحَ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான். நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம். என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்துவிட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4838 அஹ்மது 25417
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே என்று அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3559, 3759 அஹ்மது 7035
عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ…. فَقُلتُ: يَا أُمَّ المُؤمِنِينَ! أَنبئِينِي عَن خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ؟ قَالَت: أَلَستَ تَقرَأُ القُرآنَ؟ قُلتُ بَلَى.. قَالَت فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ كَانَ القُرآنَ
நான், இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் ஆம் (ஓதியிருக்கிறேன்)’ என்றேன். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன்.
அறிவிப்பவர் :- ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 746 அபூ தாவூத் 1342 அஹ்மது 24269
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ، رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ قَالَ أَجَلْ…. وَلاَ يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ
அதாஉ இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள்; நான், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து தவ்ராத் வேதத்திலுள்ள இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பண்பைப்பற்றி எனக்கு தாங்கள் கூறுங்களேன்? என்று சொன்னேன். அதற்கவர்கள், ஆம்! (கூறுகிறேன்.) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தீமைக்குப் பகரமாக தீமையைச் செய்யமாட்டார்கள். மாறாக அவர்கள் மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்’ எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அதாஉ இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹ் ஆதாரம் புஹாரி 2125, 4838 அஹ்மது 6622
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நற்குணங்களை முழுமைப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 8952
நபி முஹம்மத் ﷺ அவர்கள் வாரிவழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கிற வேளையில் அவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக மாறிவிடுவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6, 1902, 3220 நஸாயி 2095 அஹ்மது 3425
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3393 முஸ்லிம் 2308
நபி முஹம்மத் ﷺ அவர்களின் இரக்கம் கருணை
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاء
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பூமியில் உள்ளோர் மீது கருணைகாட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1924
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لايَرْحَمُ لا يُرْحَمُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5997, 6013 முஸ்லிம் 2318, அபூ தாவூத் 5218
நபி முஹம்மத் ﷺ அவர்கள் வேலைக்காரர்கள் (பணியாளர்கள்) மீது வைத்திருந்த அன்பு
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ وَاللَّهِ مَا قَالَ لِي أُفًّا قَطُّ وَلَا قَالَ لِي لِشَيْءٍ لِمَ فَعَلْتَ كَذَا وَهَلَّا فَعَلْتَ كَذَا
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) ச்சீ என்றோ இதை ஏன் செய்தாய்? என்றோ, நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா? என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2309
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ فَمَا أَعْلَمُهُ قَالَ لِي قَطُّ لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا وَلَا عَابَ عَلَيَّ شَيْئًا قَطُّ
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் இன்னின்னதை நீ ஏன் செய்தாய்? என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் 2309, அஹ்மது 11974
عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَارَسُوْلَ اللهِ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ يَارَسُوْلَ اللهَ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ كُلَّ يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً
ஒருவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யா ரஸுலல்லாஹ், நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது? என வினவினார், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும் அவ்வாறே, யா ரஸுலல்லாஹ், நான் (எனது) பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?’ எனக் கேட்க, தினமும் எழுபது முறை” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 5164 திர்மிதி 1949 அஹ்மது 5635
عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (தொழிலாளி) கூலியாளின் வியர்வை உலருவற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்து விடுங்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 2443
நபி முஹம்மத் ﷺ அவர்கள் சிறுவர்கள் (குழந்தைகள்) மீது வைத்திருந்த அன்பு
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْأُولَى ثُمَّ خَرَجَ إِلَى أَهْلِهِ وَخَرَجْتُ مَعَهُ فَاسْتَقْبَلَهُ وِلْدَانٌ فَجَعَلَ يَمْسَحُ خَدَّيْ أَحَدِهِمْ وَاحِدًا وَاحِدًا قَالَ وَأَمَّا أَنَا فَمَسَحَ خَدِّي قَالَ فَوَجَدْتُ لِيَدِهِ بَرْدًا أَوْ رِيحًا كَأَنَّمَا أَخْرَجَهَا مِنْ جُؤْنَةِ عَطَّارٍ
(ஒரு நாள்) நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் முதல்தொழுகை (லுஹ்ர்) தொழுதேன். பிறகு அவர்கள் தம் வீட்டாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது அவர்களுக்கு எதிரே சிறுவர்கள் சிலர் வந்தனர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுவர்களின் கன்னங்களை ஒவ்வொருவராகத் தடவினார்கள். என் கன்னங்களிலும் தடவினார்கள். அவர்களது கரத்திலிருந்து ”குளிர்ச்சியை” அல்லது ”நறுமணத்தை” நான் உணர்ந்தேன். அவர்கள் தமது கையை நறுமணப் பையிலிருந்து அப்போதுதான் எடுத்ததைப் போன்றிருந்தது.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு ஸம்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2329
நபி முஹம்மத் ﷺ அவர்கள் மற்ற உயிரினங்கள் (மிருகங்கள்) மீது வைத்திருந்த அன்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرْتُمْ فِي الْخِصْبِ فَأَعْطُوا الإِبِلَ حَظَّهَا مِنَ الأَرْضِ وَإِذَا سَافَرْتُمْ فِي السَّنَةِ فَأَسْرِعُوا عَلَيْهَا السَّيْرَ وَإِذَا عَرَّسْتُمْ بِاللَّيْلِ فَاجْتَنِبُوا الطَّرِيقَ فَإِنَّهَا مَأْوَى الْهَوَامِّ بِاللَّيْلِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால் (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1926 திர்மிதி 2858 அஹ்மது 8918
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنمَا رَجُلٌ يَمْشِي بطَريقٍ اشْتَدَّ علَيْهِ الْعَطشُ فَوجد بِئراً فَنزَلَ فِيهَا فَشَربَ ثُمَّ خَرَجَ فإِذا كلْبٌ يلهثُ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ لَقَدْ بلَغَ هَذَا الْكَلْبُ مِنَ العطشِ مِثْلَ الَّذِي كَانَ قَدْ بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ فَملأَ خُفَّه مَاءً ثُمَّ أَمْسَكَه بِفيهِ حتَّى رقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَه فَغَفَرَ لَه قَالُوا يَا رسولَ اللَّه إِنَّ لَنَا في الْبَهَائِم أَجْراً؟ فَقَالَ في كُلِّ كَبِدٍ رَطْبةٍ أَجْرٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (மணற்றை விட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2363, 2466, 6009 முஸ்லிம் 2244 அபூ தாவூத் 2550
நபி முஹம்மத் ﷺ அவர்களின் உயிர் அற்றவைகள் மீது வைத்திருந்த அன்பு
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْطُبُ إِلَى جِذْعِ نَخْلَةٍ، فَلَمَّا اتَّخَذَ الْمِنْبَرَ تَحَوَّلَ إِلَى الْمِنْبَرِ، فَحَنَّ الْجِذْعُ حَتَّى أَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاحْتَضَنَهُ فَسَكَنَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ لَمْ أَحْتَضِنْهُ لَحَنَّ إِلَى يَوْمِ الْقِيَامَة
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு பேரீத்த மரக் கட்டை மீது நின்று ஜும்ஆ பிரசங்கம் செய்து வந்தார்கள். எப்பொழுது மிம்பரை தயார் செய்தார்களோ அதில் ஏறி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா கொடுக்க பேரீத்த மரக் கட்டை (மாநபியின் மீதுள்ள பாசத்தால்) சிணுங்கியது. அச்சமயம் அவர்கள் இறங்கி வந்து அதை கட்டி அணைத்ததும் அது அமைதியுற்றது. நான் மட்டும் அதை கட்டி அணைக்க வில்லையென்றால் கியாமத் வரை அது குழந்தை போல் சிணுங்கிக் கொண்டே இருக்கும் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1415 தாரமீ 1604 அஹ்மது 2400, 3430
நபி முஹம்மத் ﷺ அவர்கள் சமூகத்தின் மீது அதிகம் அக்கறை கொண்டவர்கள்
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.
சூரா தவ்பா ஆயத் 128
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ
குர்ஆன் கூறுகிறது நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.
சூரா அஹ்ஜாப் ஆயத் 45
وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا
குர்ஆன் கூறுகிறது (நபியே), அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்)
சூரா அஹ்ஜாப் ஆயத் 46
وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِيْرًا
குர்ஆன் கூறுகிறது ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.
சூரா அஹ்ஜாப் ஆயத் 47
عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ لَمَّا رَأَيْتُ مِنَ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ طِيبَ النَّفْسِ قُلْتُ يَا رَسُولَ اللهِ، ادْعُ الله لِي قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهَا وَمَا تَأَخَّرَ وَمَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ فَضَحِكَتْ عَائِشَةُ حَتَّى سَقَطَ رَأْسُهَا فِي حِجْرِ رَسُولِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الضَّحِكِ فَقَالَ أَيَسُرُّكِ دُعَائِي فَقَالَتْ وَمَا لِي لا يَسُرُّنِي دُعَاؤُكَ فَقَالَ وَاللهِ إِنَّهَا لَدَعْوَتِي لأُمَّتِي فِي كُلِّ صَلاة
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனமகிழ்வுடன் இருப்பதை கண்ட நான் அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆச் செய்யுங்கள் என்றேன். அதற்கவர்கள். இறைவா! ஆயிஷாவின் முன் பின் தவறுகளையும், அவள் இரகசியமாகவும், பரகசியமாகவும் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! என்று கூறினார்கள். அப்போது நான் என் தலை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் விழும் அளவிற்கு சிரித்தேன். அப்போது அவர்கள் என்னிடம் என் பிரார்த்தனை உமக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? என்று கேட்க, அதற்கு நான் உங்களது பிரார்த்தனை எனக்கு மகிழ்ச்சியளிக்காமல் இருக்குமா என்ன? என்று கூறினேன். அதற்கவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமா அந்த எனது பிரார்த்தை என் சமூகத்திற்காக ஒவ்வொரு தொழுகையிலும் நான் கேட்கும் பிரார்த்தனையாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் ஸஹீஹ் இப்னு ஹப்பான் 7110
عَنِ ابْنِ عَبَّاس رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ مَنْ لأُمَّتِي الْمُصْفَاةِ مِنْ بَعْدِي؟ قَالَ أَبْشِرْ يَا حَبِيبَ اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ قَدْ حُرِّمَتِ الْجَنَّةُ عَلَى جَمِيعِ الأَنْبِيَاءِ وَالأُمَمِ حَتَّى تُدَاخِلَهَا أَنْتَ وَأُمَّتُكَ يَا مُحَمَّدُ قَالَ الآنَ طَابَتْ نَفْسِي
மரண சமயத்தில் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உம்மத் குறித்து வினவுகிறார்கள். ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள். நீங்களும், உங்களின் உம்மத்தும் சுவர்க்கத்தில் நுழையும் வரை மற்ற நபிமார்கள் மற்றும் அவர்களின் உம்மத் அதில் நுழைய முடியாது. அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இப்போது தான் எனது ஆத்மா மணமடைகிறது.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி முஃஜம் அல் கபீர் 2610
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நற்குணங்களை முழுமைப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 8952
நபி முஹம்மத் ﷺ அவர்கள் அடக்குமுறையை அடியோடு அழிந்தவர்கள்
عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا اعْلَمْ أَبَا مَسْعُودٍ قَالَ ابْنُ الْمُثَنَّى مَرَّتَيْنِ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ فَالْتَفَتُّ فَإِذَا هُوَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ قَالَ أَمَا إِنَّكَ لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَعَتْكَ النَّارُ أَوْ لَمَسَّتْكَ النَّارُ
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள். உடனே நான், யா ரஸுலல்லாஹ்! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்” என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் நரகம் உம்மை எரித்திருக்கும் அல்லது நரகம் உம்மைத் தீண்டியிருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1659 அபூ தாவூத் 5159
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்