பர்ளு தொழுகைக்கு பின்னர் இமாம் சத்தமிட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும், மௌனமாக ஓதுவது பித்அத்தாகும்
பர்ளு தொழுகைக்கு பின்னர் இமாம் சத்தமிட்டு துஆ ஓதுவது ஸுன்னத்தாகும், மௌனமாக ஓதுவது பித்அத்தாகும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنْ مُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது’ என்ற (துஆக்களை) ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 844
عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ
நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து என்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்ற (துஆக்களை) ஓதி வந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 5479, 5380
عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَا بُنَيَّ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ
என்னுடைய மகனே! நிச்சயமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும். இறைவா! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் மண்ணறையின் வேதனையை விட்டும் (நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்) என்ற (துஆக்களை) ஓதி வந்தார்கள்.
அறிவிப்பவர் :- அபி பக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மத் 19963 நஸாயி 5465
மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு பின்னர் துஆக்களை கற்றுக் கொடுத்தார்கள் என்று இடம் பெறவில்லை. பின்தொடர்ந்து தொழுதவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சத்தமிட்டு ஓதினார்கள் என்று இடம் பெறவில்லை. அதற்கு மாற்றமாக ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் அதாவது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாள் முழுவதும் பர்ளு தொழுகைக்கு பின்னர் குறிப்பாக மேற்குறிப்பிட்ட துஆக்களை பின்தொடர்ந்து தொழுதவர்கள் செவிமடுக்கும் அளவுக்கு சத்தமிட்டு ஓதுபவர்களாக இருந்தார்கள் என்று தான் மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
எனவே ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் இமாமாக முன்நிற்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாக துஆ ஓதியதாக எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் இடம் பெறவில்லை. சில வேளை மௌனமாக ஓதிருந்தால் பின்பற்றி தொழுத ஸஹாபாக்கள், அந்த துஆக்களை செவிமடுத்திருக்க மாட்டார்கள். இருப்பினும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு மாற்றமான முறையில் ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னரும் சத்தமிட்டு குறிப்பிட்ட துஆக்களை ஓதிய காரணத்தால் தான் பின்பற்றி தொழுத ஸஹாபாக்கள் அந்த துஆக்களை செவிமடுத்துள்ளார்கள் அதனை மனனம் செய்துள்ளார்கள். இந்த துஆக்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற கருத்தை ஸஹாபாக்கள் வழியாக நாம் அழகிய முறையில் அறிந்து கொள்ள முடிகிறது.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي فَقَالَ قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ فَصَلَّى بِنَا فَقَالَ رَجُلٌ لِثَابِتٍ أَيْنَ جَعَلَ أَنَسًا مِنْهُ قَالَ جَعَلَهُ عَلَى يَمِينِهِ ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ فَقَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خُوَيْدِمُكَ ادْعُ اللَّهَ لَهُ قَالَ فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் ரலியல்லாஹு அன்ஹா ஆகியோர் மட்டுமே இருந்தோம். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.(இதன் அறிவிப்பாளரான ஸாபித் ரஹ்மத்துல்லாஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், ” இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.-பின்னர், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், யா ரஸூலல்லாஹ்! (அனஸ்,) உங்களுடைய சிறு சேவகர். அவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!” என்றார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1170
மேற்கூறிய ஹதீஸை கூர்ந்து கவனியுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பர்ளு தொழுகைக்கு பின்னர் சத்தமிட்டு துஆ ஓதியது போல. ஸுன்னதான தொழுகையை ஜமாஅத்தாக தொழுவித்தது மட்டுமின்றி. அத் தொழுகை முடிந்த பின்னர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்தொடர்ந்து தொழுபவர்கள் செவிமடுக்கும் அளவுக்கு சத்தமிட்டு துஆக்களை ஓதியுள்ளார்கள் என்ற செய்தியை நம்மால் காண முடிகிறது.
குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் பர்ளு தொழுகையாக இருந்தாலும் சரி, தராவீஹ் தஸ்பீஹ் அது அல்லாத ஸுன்னத்து தொழுகையாக இருந்தாலும் சரி. இமாமாக முன்நின்று தொழுகை நடத்த முன்வருபவர். தொழுகையை நிறைவேற்றிய பின்னர் சத்தமிட்டு துஆ ஓதுவது நபிவழி ஸுன்னத்தாகும். அதனை மறுத்து விட்டு மௌனமாக துஆ கேட்பது பித்அத்தாகும். எந்த காரணமும் இன்றி மனமுரன்டாக திடீரென்று இமாம் எழுந்து செல்வது வழிகெட்ட பித்அத்தாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்