11) மரணித்த நபிமார்கள் நல்லடியார்களின் உடலை மண் தீண்டாது

462

மரணித்த நபிமார்கள் நல்லடியார்களின் உடலை மண் தீண்டாது

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ 

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 5661

 

மரணித்த மனிதர்களின் உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸில் பொதுவாக கூறப்பட்டுள்ளது. இதில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களின் உடல்கள் அடங்கமாட்டாது. காரணம் மரணித்த நபிமார்கள் நல்லடியார்களின் உடல்களை மண் தீண்டாது என்ற கருத்தை கீழ்காணும் திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖۤ اِلَّا دَآ بَّةُ الْاَرْضِ تَاْ كُلُ مِنْسَاَتَهُ  فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِ ‏

 

சுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் மரணித்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்துவிட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக்கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தரித்திருக்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.

சூரா ஸபா ஆயத் 14

 

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்த பின்னர் அவர்களை தாங்கிக் கொண்டிருந்த தடியை கரையான் பூச்சிகள் அரிக்கும் வரை அங்கிருந்த மக்களுக்கும் ஜின்களுக்கு அவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவில்லை. காரணம் ஊன்றுகோல் கைதடியை கரையான் பூச்சிகள் அரிக்க வேண்டும் என்றால் சுமார் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்வளவு காலமும் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உடலில் எந்த மாற்றமும் தோன்றவில்லை. அவர்களை எந்த ஒன்றும் தீண்டவும் இல்லை என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது.

 

اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا  فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ  قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) “இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) மரணித்த பின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?” என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி “இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்” எனக் கேட்க “ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்” எனக் கூறினார். (அதற்கு அவன்) “அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள்.

சூரா பகரா ஆயத் 259

 

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற உஜைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அவர்களுடைய உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் அப்படியே இருந்தார்கள்.

 

فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ

 

குர்ஆன் கூறுகிறது (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.

சூரா ஸஃபாத் ஆயத் 142 மேலும் 

 

فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ

 

குர்ஆன் கூறுகிறது (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.

சூரா ஸஃபாத் ஆயத் 145

 

நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மீன் விழுங்கி சிறிது காலம் அதன் வயிற்றில் அவர்கள் தங்கிருந்தார்கள். அதன் பின்னர் அதிலிருந்து அவர்கள் வெழிவந்தார்கள் அச்சமயம் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோர்ந்து இருந்தார்கள் ஆனால் உடலில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

 

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்கள் கப்ரிலில் (மறைந்த வன்னம்) உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது.

 

அறிவிப்பவர் :- அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1047, 1531, இப்னு மாஜா 1636 நஸாயி 1374 அஹ்மது 16162

 

عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நபிமார்கள் கப்ரிலில் (மறைந்த வன்னம்) உயிருடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்கள் கப்ரில் (சுவர்க்க) உணவுகள் வழங்கப்படுகிறது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1637

 

நபிமார்கள் உடலை மண் தீண்டாது அவர்கள் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا سَقَطَ عَلَيْهِمُ الْحَائِطُ فِي زَمَانِ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْمَلِكِ أَخَذُوا فِي بِنَائِهِ، فَبَدَتْ لَهُمْ قَدَمٌ فَفَزِعُوا وَظَنُّوا أَنَّهَا قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا وَجَدُوا أَحَدًا يَعْلَمُ ذَلِكَ حَتَّى قَالَ لَهُمْ عُرْوَةُ لَا وَاللَّهِ مَا هِيَ قَدَمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هِيَ إِلَّا قَدَمُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ

 

இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு கால் பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்த போது நான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கால் பாதமே இல்லை. மாறாக, இது உமர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் பாதகமாகும் என்றேன்’ என உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

 

அறிவிப்பவர் :- உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1390

 

வலீத் இப்னு அப்துல் மலீக் என்பவர் மதினாவை ஆட்சி செய்த காலப் பகுதியானது ஹிஜ்ரி 86ல் இருந்து ஹிஜ்ரி 96 வரையாகும். மேலும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணம் அடைந்தது ஹிஜ்ரி 23 ஆகும்.

 

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள சுவர் சுமார் 63 ஆண்டுகளுக்கு பின்னர் இப்னு அப்தில் மலிக்கின் ஆட்சிக் காலத்தின் போது இடிந்து விழுந்தது. அச்சமயம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கால் பாதம் வெளிப்பட்டது. ஆக கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்து 63 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் உடல் கப்ரில் வைத்தது போன்றிருந்தது.

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَا أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الْآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ فَإِذَا هُوَ كَيَوْمَ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ

 

உஹதுப் போர் நடக்கவிருந்த போது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்’ என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1351

 

காஃபிர்களுடன் போராடி வீரமரணம் அடைந்த ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தையை அடக்கம் செய்த பின்னர் சுமார் 6 மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை கப்ரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது. அச்சமயம் அவர்களின் உடல் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டது போன்றிருந்தது.

 

عَنْ خَالِدُ بْنُ دِينَارٍ عَنْ أَبِي الْعَالِيَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا افْتَتَحْنَا تُسْتَرَ وَجَدْنَا فِي بَيْتِ مَالِ الْهُرْمُزَانِ سَرِيرًا عَلَيْهِ رَجُلٌ مَيِّتٌ عِنْدَ رَأْسِهِ مُصْحَفٌ لَهُ… قُلْتُ مَنْ كُنْتُمْ تَظُنُّونَ الرَّجُلَ قَالَ دَانْيَالُ عَلَيْهِ السَّلَامُ

 

(உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் ஈராக்கிலுள்ள) துஸ்தர் கோட்டையை நாங்கள் வெற்றி கொண்டோம். அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஒரு மரணித்த மனிதனின் சடலம் ஓர் படுக்கையில் இருந்தது. அதன் தலைமாட்டில் வேதநூலும் இருந்தது…. இந்த மனிதர் யார் என்று கேட்க? (நபி) தானியால் அலைஹிஸ்ஸலாம் என்று பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஆலியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” தலாயிலுன் நுப்வா 1/381

 

உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் ஈராக்கிலுள்ள துஸ்தர் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது. அச்சமயம் பெட்டிக்குள் படுக்கவைத்திருந்த சடலம் நபி தானியல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடலாகும். பல நூற்றாண்டுகளாக அவர்களின் உடல் அப்படியே இருந்தது.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَكَتَبَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ بِذَلِكَ إِنَّ هَذَا نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ وَالنَّارُ لَا تَأْكُلُ الْأَنْبِيَاءَ وَالْأَرْضُ لَاتَأْكُلُ الْأَنْبِيَاءَ

 

அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். நிச்சயமாக இந்த (சவப்பெட்டியிலுள்ள தானியல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) நபிமார்களில் ஒருவராவார். மேலும் நபிமார்க(ளின் உடலை) நெருப்பு தீண்டாது. மண்ணும் தீண்டாது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீ ஷைபா 33179

 

عَنْ أَبِي الْعَالِيَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ لُحُومَ الْأَنْبِيَاءِ لَا تُبْلِيهَا الْأَرْضُ، وَلَا تَأْكُلُهَا السِّبَاعُ

 

அபூ ஆலியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தீண்டாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது.

 

அறிவிப்பவர் :- அபூ ஆலியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” தலாயிலுன் நுப்வா 1/381அல் கஸாஇஸுல் குப்ரா 2/280

 

நபிமார்களின் உடல்களை மண்ணும் நெருப்பும் தீண்டாது மேலும் நபிமார்களின் உடல்களை சிங்கம் புலி போன்றவர்களும் சாப்பிடாது என்ற கருத்தை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்ற நபிமார்கள் நல்லடியார்களின் உடல்கள் மரணித்த பின்னரும் பாதுகாக்கப்படுகிறது. அவர்களின் உடல்களை மண்ணும் தீண்டாது நெருப்பும் தீண்டாது சிங்கம் புலி போன்றவர்களும் தீண்ட மாட்டாது என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.