15) அவ்லியாக்களின் கப்ருகளை தரைமட்டம் ஆக்க வேண்டும் அதனை கட்டக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூட இல்லை

374

15) அவ்லியாக்களின் கப்ருகளை தரைமட்டம் ஆக்க வேண்டும் அதனை கட்டக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூட இல்லை

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பொது மையவாடிகளிலுள்ள) கப்றுகளை காரையால் பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் தடை செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 970, அபூதாவூத் 3225, திர்மிதி 1052, இப்னு மாஜா 1562 நஸாயி 2027, 2028, 2029, அஹ்மது 14148,14149

 

بَابٌ : النَّهْيُ عَنْ تَجْصِيصِ الْقَبْرِ وَالْبِنَاءِ عَلَيْهِ

 

முஸ்லிம் ஷரீபில் கப்றுகள் மீது கட்டிடம் கட்டுவது தடை கூடாது என்ற பாடத்தின் கீழ் மேற்கூறிய ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

بَابٌ :- كَرَاهِيَةُ تَجْصِيصِ الْقُبُورِ وَالْكِتَابَةِ عَلَيْهَا

 

திர்மிதி ஷரீபில் கப்றுகளை பூசுதல், அதில் எழுதுதல் மக்றூஹ் வெறுக்கத்தக்க செயல் என்ற பாடத்தின் கீழ் மேற்கூறிய ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

وأما البناء عليه فإن كان في ملك الباني فمكروه، وإن كان في مقبرة مسبلة فحرام

 

المنهاج شرح صحيح مسلم بن الحجاج
تحفة الأحوذي بشرح جامع الترمذي
عون المعبود شرح سنن أبي داود

 

♦️மேற்கூறிய ஹதீஸை மூலாதாரமாக வைத்து இமாம்கள் சட்டம் சொல்லும் போது தன்னுடைய சொந்த (காணி) இடத்தில் கப்ரு அமைந்திருந்தால் அதனை கட்டுவது மக்ரூஹ் வெறுக்கத்தக்க செயலாகும். அது பொது மய்யவாடியில் அமைந்திருந்தால் அதனை கட்டுவது கூடாது ஹராமாகும்.

 

நூல் ஆதாரம் :- முஸ்லிம் ஷரீப் விரிவுரை ஷரஹ் மின்ஹாஜ், மேலும் திர்மிதி ஷரீப் விரிவுரை துஹ்பதுல் அஹ்வதி, மேலும் அபூ தாவூத் விரிவுரை அவ்னுல் மஃபூது போன்ற ஹதீஸ் விளக்கவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

♦️இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இஸ்லாத்தின் பார்வையில் ஹராம் கூடாது என்று வரும்போது அதனை செய்தால் பாவி குற்றவாளியாக கருதப்படுவார்கள். மேலும் மக்றூஹ் வெறுக்கத்தக்க செயல் என்று வரும்போது அதனை செய்தால் பாவி குற்றவாளியாக கருதப்பட மாட்டார்கள் என்ற இஸ்லாமிய சட்டத்தை நாம் நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

♦️எனவே மேற்கூறிய ஹதீஸ் விடயத்தில் இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் மேற்கூறிய ஹதீஸ் பொதுவாக சொல்லப்பட்டவையாகும். அது பொது மய்யவாடிகளிலுள்ள பொது மக்களின் கப்ருஸ்தானங்களை குறித்து பேசுகிறது. அதாவது பொது மய்யவாடிகளில் பொது மக்களின் கப்ருஸ்தானங்களை கட்டுவதன் மூலம் இடம் நெருக்கடி ஏற்படும். பிற்காலத்தில் வரவிருக்கும் ஜனாஸாக்களை அடக்குவது விடயத்தில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினால் தான் பொது மய்யவாடிகளிலுள்ள பொது மக்களின் கப்ருகளை அடையாளமாக கட்டுவது ஹராம் தடை செய்யப்பட்டுள்ளது. பொது மய்யவாடி அல்லாத தனிப்பட்ட சொந்த காணி சொந்த இடமாக இருந்தால் அங்கு அடக்கம் செய்துவிட்டு அந்த கப்ருகளை கட்டுவது ஹராம் அல்ல. மக்றூஹ் வெறுக்கத்தக்க செயலாகும். அடுத்து மேற்கூறிய ஹதீஸில் அவ்லியாக்கள் அதாவது நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்கள் அடங்கமாட்டாது. காரணம்

 

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ

 

அலி இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்கு கூறினார்கள். என்னை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பிய விடயத்தின் மீது நான் உன்னை அனுப்புகிறேன். விக்கிரகங்களை அழிக்காமல் விட்டு விடாதே! (ஒட்டகத்திமிலை விடவும் அதிகளவில்) உயர்ந்துள்ள (நபிமார்கள் நல்லடியார்களின்) கப்றுகளை ஒழுங்கு படுத்தாமல் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபுல் ஹய்யாஜ் அல் அஸ்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 968, அபூ தாவூத் 3218 திர்மிதி 1049, நஸாயி 2031 அஹ்மது 657, 683, 741, 881, 889

 

مُشْرِفًا

 

🔶முஷ்ரிபன் :- உயர்ந்தது, உயர்வானது, உயர்ந்த இடம், ஒட்டகத்தின் திமில் போன்ற உயர்வானது என்றும் பொருள் கொள்ளப்படும்.

 

سَوَّيْتَهُ

 

🔶ஸவ்வைதஹு :- ஒழுங்கு படுத்துதல், செவ்வைப்படுத்துதல், சமப்படுத்தல், வளைந்த ஒன்றை நேராக்குதல், சீராக்குதல், (அழகு படுத்துதல்) என்று பல கோணங்களில் பொருள் கொள்ளப்படும்.

 

நூல் ஆதாரம் :- திருக்குர்ஆன், அகராதி முன்ஜித், காமூஸ்

 

♦️மேற்கூறிய ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்திமிலை விடவும் அதிகளவில் உயர்ந்துள்ள கப்ருகளை ஒழுங்கு படுத்தச் சொன்னார்களே தவிர அதனை உடைத்து தரமட்டமாக்கச் சொல்லவில்லை. உண்மையில் அப்படி சொல்லி இருந்தால் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை தரமட்டமாக்கி இருப்பார்கள். காரணம்

 

عَنْ سُفْيَانَ التَّمَّارِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ رَأَى قَبْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسَنَّمًا

 

சுப்யானுத் தம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை நான் பார்த்தேன் அது ஒட்டகத் திமிலை போன்று உயரமாக இருந்தது.

 

அறிவிப்பவர் :- சுப்யானுத் தம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புஹாரி 1390

 

♦️ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் காலத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் ஒட்டகத் திமிலை போன்று உயரமாக இருந்துள்ளது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் பறைசாற்றுகிறது.

 

♦️ஆக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ரவ்ளா ஷரீப் ஒட்டகத் திமிலை போன்று உயரமாக இருந்த விஷயம் அலி ரலியல்லாஹு அன்ஹு அபுல் ஹய்யாஜ் அல் அஸ்தீ ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களுக்கு தெரிந்திந்தும் அவர்கள் அதனை தரமட்டமாக்க வில்லை. காரணம் ஸவ்வைதஹு என்ற சொல்லுக்கு தரைமட்டம் ஆக்குங்கள் என்ற அர்த்தம் கிடையாது என்பதையும், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயர்ந்துள்ள கப்ருகளை தரைமட்டம் ஆக்குங்கள், உடைத்தெறிந்து விடுங்கள் என்று ஒரு போதும் கூறவில்லை என்பதையும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்ற கருத்தை நாம் புரிந்து கொள்வது மட்டுமின்றி நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருகளை தரைமட்டம் ஆக்குவது அதனை உடைத்தெறிவதற்கும் மேற்கூறிய ஹதீஸ்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஹதீஸின் விளக்கம் :- நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை ஒழுங்கு படுத்துங்கள். அதாவது அதன் உயரத்தை குறைத்து ஒட்டகத்திமில் போன்ற ஓர் அளவுக்கு அடையாளமாக கொண்டு வாருங்கள். ஒட்டகத்திமிலை விடவும் அதிகளவில் உயர்த்த வேண்டாம். இதன் காரணம் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்கள் பெரும்பாலும் பொது மய்யவாடிகளில் நல்லடக்கம் செய்வது கிடையாது. தனிப்பட்ட இடங்களிலும் அவர்கள் மரணம் அடைந்த இடங்களிலும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த முஃமின்கள் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அடையாளமாக கற்களை கொண்டு ஓர் அளவுக்கு ஒட்டகத்திமில் போன்று கட்டினார்கள். அத்தையை நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை யூத கிறிஸ்தவர்கள் அத்துமீறி அதை வணங்கி வழிபடும் நோக்கில் அதிக உயரமான கட்டிடங்களை எழுப்பி அதனை வணங்கி வழிபட்டு வந்தார்கள்.

 

♦️இதனால் தான் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயர்ந்துள்ள (நபிமார்கள் நல்லடியார்களின்) கப்ருஸ்தானங்களை
ஒழுங்கு படுத்தாமல் அதாவது (அதன் உயரத்தை குறைத்து ஒட்டகத்திமில் போன்ற ஓர் அளவுக்கு அடையாளமாக கொண்டு வராமல்) விட்டு விடாதே! என்ற கருத்தைக் கூறியுள்ளார்களே அன்றி வேறில்லை.

 

குறிப்பு :- பொது மைய்யவாடிகளிலுள்ள பொது மக்களின் கப்ருஸ்தானங்கள் சில வருடங்களுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும். அவர்களின் உடல்கள் அழிந்து விடும். அந்த இடத்தில் இன்னொரு ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியும். ஆனால் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்கள் எக்காலத்திலும் புதுப்பிக்கப்பட்ட மாட்டாது. காரணம் மரணித்த நபிமார்கள் நல்லடியார்கள் கப்ருஸ்தானங்களில் மறைந்த வன்னம் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் தொழுது வருகிறார்கள். அவர்களின் உடல்களை மண் தீண்டாது என்ற கருத்துக்களை முன்னைய தலைப்புகளில் ஆதாரங்களுடன் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற கப்ருஸ்தாங்களை உடைத்து தரைமட்டமாக்குவது அதனை புதுப்பிப்பது அதிலுள்ள நபிமார்கள் நல்லடியார்களின் உடல்களை வெளியேற்றுவது. அதனுள் வேறு ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது இஸ்லாத்தில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.