3) அல்லாஹ்விற்கு இரு கைகள் உள்ளதா?
அல்லாஹ்விற்கு (இரு) கைகள் உள்ளதா?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ
குர்ஆன் கூறுகிறது “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்.
சூரா மாயிதா ஆயத் 64
அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று ஏன் யூதர்கள் கூறவேண்டும்? யூதர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளது என்றும். அல்லாஹ்வின் கைகளோ விரிக்கப்பட்டுள்ளது என்று யூதர்களுக்கு மாற்றமாக ஏன் அல்லாஹ் இவ்வாறு கூறினான் என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள். ஆகவே அல்லாஹ்விற்கு கைகள் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. இன்று அதிகமான யூதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் கை கட்டப்பட்ட வில்லை. அப்படியென்றால் மேற்கூறப்பட்ட ஆயத்திற்கு நேரடி அர்த்தம் வைப்பது முற்றிலும் தவறு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மாற்றமாக மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வின் கைகள் என்பதற்கு சக்தி என்று வழிந்துரை அர்த்தம் கொடுப்பது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- அல்லாஹ்விற்கு சக்தி கிடையாது என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுக்குதான் எவ்வித சக்தியும் இல்லை. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் சக்திக்கு குறைவே இல்லை அது எப்போதும் நிலைத்திருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ
குர்ஆன் கூறுகிறது “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்த (ஆதமுக்கு) ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
சூரா ஸாத் ஆயத் 75
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான் என்று கூறியதன் அர்த்தம் என்ன என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு இரு கைகள் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. உதாரணமாக அரசன் கோட்டையை கட்டினான் என்று ஒருவர் கூறினால் அதனுடைய அர்த்தம். அரசின் கூலிவேலை செய்பவர்களை கொண்டு கோட்டையை கட்டினான் என்று என்று பொருள் கொள்ள வேண்டும். அதே போன்று அல்லாஹ் தன் கைகளால் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தேன் என்று கூறியதன் அர்த்தம் அல்லாஹ் மலக்குகளை கொண்டு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைக்கவில்லை. அதற்கு மாற்றமாக தன் இஷ்டப்பிரகாரம் அல்லாஹ்வே முன் நின்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்துள்ளான் என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- இப்லீஸே! தான் முன் நின்று தன் இஷ்டப்பிரகாரம் படைத்த (ஆதமுக்கு) ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ
குர்ஆன் கூறுகிறது எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
சூரா முல்க் ஆயத் 1
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான் என்று குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கையில் ஆட்சி இருக்கிறது என்றால் அதன் அர்த்தம் என்ன? ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்திருக்க வேண்டும் என்றால் அது ஓர் உருவ அமைப்பில் இருத்தல் வேண்டும். ஆனால் ஆட்சி அதிகாரம் இவைகளுக்கு எந்தவொரு உருவ அமைப்பும் இல்லாத போது அதனை எப்படி கைகளில் வைத்திருப்பது? சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு கைகள் உள்ளது என்று உருவ வணங்கிகள் போன்று நாமும் உருவம் கற்பிக்கக்கூடாது. உதாரணமாக :- பேச்சிலிருந்து வரும் சத்தம் இதற்கு உருவம் கிடையாது. அதேபோல் வெளிச்சத்திலிருந்து வரும் ஒளி இதற்கும் உருவம் கிடையாது. இது போன்றவைகளை கைகளால் பிடிக்கவோ கைகளில் வைத்திருக்கவோ முடியாது. இது போன்று தான் ஆட்சி அதிகாரம் இதற்கும் உருவம் கிடையாது. இது போன்ற ஒன்றை கைகளில் வைத்திருக்க முடியாது. ஆக ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் கைகளில் வைத்திருக்கிறான் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
அல்லாஹ்வின் கைகளில் ஆட்சி இருக்கிறது என்றால் ஆட்சி அதிகாரத்தை தன் கைகளில் வைத்திருக்கிறான் என்று அர்த்தம் அல்ல. உதாரணமாக :- இந்த ஊருக்கே நான் தான் தல அல்லது இந்த ஊரே என் கைகளில் தான் இருக்கிறது என்று ஜனாதிபதியோ அல்லது அரசனோ கூறினால். ஜனாதிபதியின் தல மட்டும் தான் ஊரில் உள்ளது. அரசன் தன் கைகளில் ஊரை தூக்கி வைத்துள்ளான் என்று வஹாபிஷ வாதிகள் போன்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது. இதற்கு மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும். இந்த ஊருக்கே நான் தான் தல அல்லது இந்த ஊரே என் கைகளில் தான் இருக்கிறது என்றால் இந்த ஊரே என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. என் கைவசம் இருக்கிறது என்று அர்த்தமாகும். இதே போன்று தான் அல்லாஹ்வின் கைகளில் ஆட்சி இருக்கிறது என்றால் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி அதிகாரம் உள்ளது என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஆயத்திற்கு சரியான அர்த்தம் :- எவனுடைய கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்ய வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய மக்கள் காலத்தை ஏசுகிறார்கள் நானே காலமாக இருக்கிறேன். என்னுடைய கரம் கைகளில் இரவும், பகலும் உள்ளன.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4283
நம் மேற்கூறிய ஆயத்தை போன்றே இந்த ஹதீஸையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்திற்கு உருவம் இல்லை அதனால் அவைகளை கைகளில் வைத்திருக்க முடியாது. அதுபோல இரவு பகல் இவைகளுக்கும் உருவம் இல்லை அதனால் இவைகளை கைகளில் வைத்திருக்க முடியாது. ஆதலால் மேற்கூறப்பட்ட ஹதீஸிக்கு மாற்றுப் பொருள் அதாவது கை என்பதற்கு அனுமதி நியமனம் என்று வழிந்துரை அர்த்தம் செய்வது அவசியமாகும்.
♦️எனவே மேற்கூறிய ஹதீஸிக்கு சரியான அர்த்தம் :- ஆதமுடைய மக்கள் காலத்தை ஏசுகிறார்கள் நானே காலத்தை படைத்து அதில் சூழ்ந்து இருக்கிறேன். இரவு பகல் மாறி வருவதை நானே நியமனம் அனுமதி அழிக்கிறேன்” என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்