31) உழைத்து உண்ணும் கூலியாளர்களின் கூலி விஷயத்தில் முதலாளிகள்
உழைத்து உண்ணும் கூலியாளர்களின் கூலி விஷயத்தில் முதலாளிகள்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
கடினமாக இருந்தாலும் உழைத்து உண்ணுங்கள்
عَنْ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது.
அறிவிப்பவர் :- மிக்தாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2072 அஹ்மது 17181
யாசகம் கேட்பவர்களே! முடிந்த வரை உழைத்து உண்ண முயற்சி செய்யுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2074, 2374
வாக்களித்து விட்டு மாறு செய்யாதீர்கள், பேசிய கூலியை கூலியாளர்களின் வேலை முடிந்த மறுகணமே கொடுத்து விடுங்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللّه ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِه أَجْرَهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2227 இப்னு மாஜா 2442 அஹ்மது 8692
கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காய்வதற்கு முன்னர் கொடுத்து விடுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (கூலித்தொழில் செய்யும்) கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காய்வதற்கு முன் கொடுத்து விடுங்கள்.
அறிவிப்பவர் :- அப்தில்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 2443
கூலிக்காரர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்
فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு எனும் தோழரிடம் கூறினார்கள். கூலியாளர்கள் உங்கள் சகோதரர்கள், நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்தும் உடையை உடுத்தக்கொடுங்கள். கூலியாளியின் சக்திக்கு மீறிய வேலை இருந்தால் முதலாளியும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தும் இதில் உண்டு ஓய்வே இல்லாத வகையில் வேலை வாங்கக் கூடாது. பணியாளரையும் நம்மைப் போல் ஒரு மனிதனாக கருத வேண்டும்.
அறிவிப்பவர் :- மஃரூர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 30 முஸ்லிம் 1661 அஹ்மது 21432
கூலியாளர்கள் பணியாளர்கள் தவறு செய்தால் அவைகளை மன்னியுங்கள்
عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَارَسُوْلَ اللهِ كَمْ اَعْفُوْ عَنِ الْخَادِمِ؟ فَصَمَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ يَارَسُوْلَ اللهَ كَمْ اَعْفُوَ عَنِ الْخَادِمِ؟ قَالَ كُلَّ يَوْمٍ سَبْعِيْنَ مَرَّةً
ஒருவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யா ரஸுலல்லாஹ், நான் (என்னுடைய) பணியாளரின் தவறை எத்தனை தடவை மன்னிப்பது?” என வினவினார், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அவர் மீண்டும் அவ்வாறே, யா ரஸுலல்லாஹ், நான் (எனது) பணியாளரின் தவறை எத்தனை முறை மன்னிப்பது?” எனக் கேட்க, தினமும் எழுபது முறை” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1949 அஹ்மது 5635
பணிவிடை செய்யும் கூலியாளர்களின் மனங்களை குளிரச் செய்யும் முதலாளிகளாக, எஜமானாக மாறிக் கொள்ளுங்கள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ وَاللَّهِ مَا قَالَ لِي أُفًّا قَطُّ وَلَا قَالَ لِي لِشَيْءٍ لِمَ فَعَلْتَ كَذَا وَهَلَّا فَعَلْتَ كَذَا
நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) “ச்சீ” என்றோ “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4279 தாரமீ 63 அஹ்மது 13021
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்