36) நீதிபதிகளின் நீதியும் அநீதியும்

83

நீதிபதிகளின் நீதியும் அநீதியும்

 

சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.

 

நீதிபதிகளே! நீதியாக தீர்ப்பு கொடுங்கள், அநீதியாக தீர்ப்பு கொடுக்காதீர்கள்

 

عَنْ ابْنِ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِه وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீதிபதிகள் மூன்று விதம். ஒருவர் சுவர்க்கவாதி, மற்ற இருவரும் நரகவாதிகளாகும். சத்தியத்தை அறிந்து அதன்படி தீர்ப்புக் கூறியவர் சுவர்க்கவாதியாகும். சத்தியத்தை அறிந்து அதில் அநீதி இழைத்தவர் நரகவாதியாகும். (மூன்றாமவரான) மற்றவர், அறியாமையில் தீர்ப்புக்கூறி நரகத்திற்கு உரியவரானவர்.

 

அறிவிப்பவர் :- புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 3573 திர்மிதி 1322

 

நீதிபதிகளே! கோபத்தில் இருக்கும் போது, ஆத்திரம் ஏற்படும் போது தீர்ப்பு வழங்காதீர்கள்

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضٍ بِسِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ

 

அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் இப்னு அபீபக்ரா ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) அப்போது அவர் (ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த) “சிஜிஸ்தான்” பகுதியில் நீதிபதியாக இருந்தார். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
(மகனே!) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், “கோபமாக இருக்கும் போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்கவேண்டாம்” என இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

 

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ரா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1717 நஸாயி 5406

 

அநீதி இழைக்காதீர்கள்

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப் பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2578 அஹ்மது 14461

 

பேரிச்சம்பழமாக இருந்தாலும் நீதமாக பங்கு வைத்து உண்ண வேண்டும்

 

عَنْ جَبَلَةَ كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ الْعِرَاقِ فَأَصَابَنَا سَنَةٌ فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ فَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَمُرُّ بِنَا فَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْإِقْرَانِ إِلَّا أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ

 

நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர’ என்று கூறுவார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜபலா இப்னு ஸூஹைம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 2455

 

அநீதி இழைப்பவர்களே! மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2447 முஸ்லிம் 2579 திர்மிதி 2030

 

அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2448 திர்மிதி 625 நஸாயி 2435

 

அநீதி இழைக்கப்பட்டவர் மன்னிக்காத வரை அநீதி இழைத்தவன் எந்த விதத்திலும் மறுமை நாளில் தப்பிக்க முடியாது

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2449 அஹ்மது 9615

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.