41) அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பங்கிடலாமா?

177

41) அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பங்கிடலாமா?

 

📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ

 

குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.

சூரா பகரா ஆயத் 173″ சூரா மாயிதா ஆயத் 3″ சூரா அன்ஆம் ஆயத் 145

 

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ

 

குர்ஆன் கூறுகிறது (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள்.

சூரா அன்ஆம் ஆயத் 121

 

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

 

குர்ஆன் கூறுகிறது (அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானி கொடுத்து வாருங்கள்.

சூரா கவ்ஸர் ஆயத் 2

 

عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ عَنْ جَدِّهِ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لَنَا مُدًى فَقَالَ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ

 

நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், யா ரஸுலல்லாஹ்! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே” என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இரத்தத்தைச் சிந்தக்கூடிய எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு) விட்டால் அதை நீங்கள் உண்ணலாம் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ராஃபிஉ இப்னு கதீஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5503

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ قَوْمًا يَأْتُونَا بِاللَّحْمِ لَا نَدْرِي أَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ أَمْ لَا فَقَالَ سَمُّوا عَلَيْهِ أَنْتُمْ وَكُلُوهُ

 

ஒரு கூட்டத்தார் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?) என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5507

 

عَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாத மற்றவர் (பெயர் கூறி) அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்.

 

அறிவிப்பவர் :- அபூ துபையில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 4001, 4002, 4003

 

அனுமதிக்கப்பட்ட மிருகங்களை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும்” அல்லாஹ் அல்லாதவர்களுடைய பெயர் கூறி அறுக்கக் கூடாது. இவ்வாறு அறுக்கப்பட்டதா? இல்லையா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை சமைத்து உண்ண முடியும் என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட திர்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ وَيَبْرُكُ فِي سَوَادٍ وَيَنْظُرُ فِي سَوَادٍ فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ فَقَالَ لَهَا يَا عَائِشَةُ هَلُمِّي الْمُدْيَةَ ثُمَّ قَالَ ‏اشْحَذِيهَا بِحَجَرٍ فَفَعَلَتْ ثُمَّ أَخَذَهَا وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ ثُمَّ ذَبَحَهُ ثُمَّ قَالَ ‏بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ‏ ثُمَّ ضَحَّى بِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள், வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) இறைவா! எனக்காகவும் எனது குடும்பத்தார்களுக்காகவும் என்னுடைய சமுதாயத்தினர்களுக்காகவும் இதனை ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ செய்தார்கள், அந்த ஆட்டை “பிஸ்மில்லாஹ்” அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1967 அபூ தாவூத் 2792

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَنَّهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒரு ஆட்டை அறுத்து விட்டு தன் சமுதாயத்தில் யாரெல்லாம் உழ்ஹிய்யா கொடுக்க (முடியாமல் இருக்கிறார்களோ) அவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுத்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2010

 

ஆரம்ப ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டை பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து அவர்களுடைய பெயரிலும் அவர்களின் குடும்பம் மற்றும் சமுகத்தின் பெயரிலும் பங்கீடு செய்தார்கள். மற்ற ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து விட்டு தன் சமுதாயத்தில் யாரெல்லாம் உழ்ஹிய்யா கொடுக்க (முடியாமல் இருக்கிறார்களோ) அவர்களுடைய பெயரில் பங்கீடு செய்தார்கள் என்ற கருத்துக்களை நம்மால் காணமுடிகிறது.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ فَرُبَّمَا قُلْتُ لَهُ: كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ، فَيَقُولُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ

 

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் அவர்களை பார்த்ததில்லை. ஆனால், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்த, பிறகு அதை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘உலகில் கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ’ என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், ‘அவர்கள் (புத்திசாலியாக) இருந்தார்கள்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார்கள். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்கள்) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது’ என்று பதில் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 3828 முஸ்லிம் 2435

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த பிறகு அவர்களை அதிகம் ஞாபகம் ஊட்டுபவர்களாக இருந்தது மட்டுமின்றி அவர்களுடைய பெயரில் ஆட்டை அறுத்து அன்னை அவர்களுடைய தோழிகளுக்கு அனுப்பி வைப்பார்கள் என்ற கருத்தை நம்மால் காணமுடிகிறது.

 

عَنْ أَبِي الْحَسْنَاءِ عَنْ الْحَكَمِ عَنْ حَنَشٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَأَيْتُ عَلِي رَضِيَ اللَّهُ عَنْهُ يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை இரு ஆடுகளை குர்பானி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஹனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏன் இரண்டு குர்பானி கொடுத்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் தமக்காக ஒரு குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத் செய்திருந்தார்கள். ஆகையால் இவ்விரண்டில் ஒன்று அவர்களுக்கும் எனக்கும் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஹனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 2790 அஹ்மத் 1219

 

عَنْ عَطَاءَ بْنَ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ كَانَ الرَّجُل فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஒரு மனிதர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பவராக இருந்தார்.

 

அறிவிப்பவர் :- அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் திர்மிதி 1425 இப்னு மாஜா 3138

 

ஆரம்ப ஹதீஸில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரு ஆடுகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து விட்டு அதில் ஒன்றை அவர்களுடைய பெயரிலும் மற்றதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரிலும் பங்கீடு செய்தார்கள். மற்ற ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஓர் மனிதர் ஒரு ஆட்டை அறுத்து அவர்களுடைய பெயரிலும் அவருடைய குடும்பத்தாரின் பெயரிலும் பங்கீடு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற கருத்துக்களை நம்மால் காணமுடிகிறது.

 

அனுமதிக்கப்பட்ட மிருகங்களை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும்” அறுத்த மிருகங்களை அல்லாஹ் அல்லாதவர்களுடைய பெயரில் அதாவது நபிமார்கள் நல்லடியார்கள் பெயரில் குறிப்பாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரில் பங்கீடு செய்வதில் எவ்வித குற்றமும் இல்லை அதற்கு இஸ்லாம் பூர்ண அனுமதி வழங்கியுள்ளது என்ற கருத்துக்களை மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

குறிப்பு :- அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! முஸ்லிம் ஊர்களில் இறைச்சி கடைகள் அதிகம் உள்ளது. அங்கு ஆடு, மாடு, கோழி, போன்றவைகள் அறுக்கப்படுகிறது. ஏன் எதற்காக அறுக்கிறார்கள்? இறைச்சி கடைகளில் மிருகங்களை அறுப்பது அல்லாஹ்விற்காகவா? அல்லது வியாபாரம் மக்களுக்காகவா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மிருகங்களை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து அல்லாஹ் அல்லாதவர்களுடைய பெயரில் குறிப்பாக நபிமார்கள் நல்லடியார்களுடைய பெயரில் பங்கீடு செய்வதற்கு இஸ்லாம் பூரண அனுமதி வழங்கியுள்ளது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.