49) நல்லதும் கெட்டதும்
நல்லதும் கெட்டதும்
சாந்தி சமாதானத்தின் தீர்க்கதரிசி நபி முஹம்மத் ﷺ அவர்கள் இவ்வுல மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
நல்லவற்றை உருவாக்குங்கள், தீயவற்றை உருவாக்காதீர்கள்
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.
அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1017 அஹ்மது 19156
நல்வழிக்கு மக்களை அழையுங்கள், தவறான வழிக்கு மக்களை அழைக்காதீர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்து விடாது.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2674 அபூதாவூத் 4609 திர்மிதி 2674
ஹலால் ஹராமை பேணி நடந்து கொள்ளுங்கள்
عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹலால்) ‘அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் (ஹராம்) அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்! என்றார்கள்.
அறிவிப்பவர் :- நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 52 முஸ்லிம் 1599 நஸாயி 5397
தான் தனிமையில் செய்த பாவத்தை தாமே மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாதீர்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافَاةٌ إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنَ الْإِجْهَارِ أَنْ يَعْمَلَ الْعَبْدُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحُ قَدْ سَتَرَهُ رَبُّهُ فَيَقُولُ يَا فُلَانُ قَدْ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ فَيَبِيتُ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர! ஓர் அடியான் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் இறைவன் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, “இன்ன மனிதரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகின்றான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2990
முதியவர்களே! உங்கள் மனங்களை இளமை போன்று மாற்றிக் கொள்ளாதீர்கள்
عَنِ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ قَلْبُ الْكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الْأَمَلِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். அதில் ஒன்றுதான் இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். மற்றது நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6420 இப்னு மாஜா 4233
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்