9) மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறும் ஆதாரங்களும் அதன் தெளிவும்
மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறும் ஆதாரங்களும் அதன் தெளிவும்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ
குர்ஆன் கூறுகிறது (நபியே!) மரணித்தவர்களுக்குக் கேட்கும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. (அவ்வாறே உங்களுக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களுக்கு நீங்கள் அழைக்கும் (உங்களுடைய) சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் முடியாது.
சூரா நம்ல் ஆயத் 80
فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ
குர்ஆன் கூறுகிறது (நபியே!) மரணித்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உங்களால் முடியாது.
சூரா ரூம் ஆயத் 52
இரு வசனங்களையும் கூர்ந்து கவனியுங்கள். மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று மேற்கூறிய வசனம் கூறவில்லை அதற்கு மாற்றமாக மரணித்தவர்களை செவியேகச்செய்ய நிச்சயமாக உங்களால் முடியாது என்றும் அடுத்து புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்கு உங்கள் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உங்களால் முடியாது என்றும் இருவிதமாக கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த வசனங்கள் இறங்கிய காரணம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை எடுத்து சொல்லும் போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை சில (காஃபிர்கள்) செவிமடுத்தும் செவிமடுக்காதவர்கள் போன்று புறமுதுகு காட்டி சென்றார்கள் அச்சமயம் மேற்கூறிய வசனங்கள் இறங்கியது.
ஆக மொத்தத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை புறக்கணித்து சென்ற காஃபிர்களை அல்லாஹ் மரணித்தவர்களுக்கு ஒப்பிடுகிறான். காரணம் மரணித்தவர்கள் அழைப்பை செவியேற்பார்கள் ஆனால் வெளிப்படையில் பதில் தரமாட்டார்கள். அதுபோல இந்த காஃபிர்களும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை செவியேற்கிறார்கள் ஆனால் வெளிப்படையில் பதில் தராமல் செவிடர்கள் போன்று புறமுதுகு காட்டி சென்றார்கள். அச்சமயம் மேற்கூறிய வசனங்கள் இறங்கியது. ஆக மொத்தத்தில் இந்த காஃபிர்களை அல்லாஹ் மரணித்தவர்களுக்கு சமமானவர்கள் என்று ஒப்பீடு செய்கிறான் என்ற கருத்தை நம்மால் காண முடிகிறது. மேலும்
وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ
குர்ஆன் கூறுகிறது உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கின்றான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உங்களால் முடியாது.
சூரா பாத்திர் ஆயத் 22
இந்த வசனத்தின் விளக்கம் :- உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். காரணம் உயிருள்ளவர்கள் செவியேற்பார்கள் வெளிப்படையில் பதிலும் தருவார்கள். அதுபோல மரணித்தவர்கள் செவியேற்பார்கள் ஆனால் வெளிப்படையில் பதில் தர மாட்டார்கள். ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழைபை புறக்கணித்து சென்ற உயிரோடுள்ள காஃபிர்களை அல்லாஹ் மரணித்தவர்களுக்கு சமமானவர்கள் என்று ஒப்பீடு செய்கிறான் என்ற கருத்தை நாம் மேற்கூறிய வசனத்தை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து மேற்கூறிய மூன்று வசனங்களிலும் மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும் புறமுதுகு காட்டி செல்பவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும் இடம் பெறவில்லை. அதற்கு மாற்றமாக நபியே உங்களால் அவர்களை செவியேற்க செய்ய முடியாது என்று தான் இடம் பெற்றுள்ளது.
உதாரணமாக :- நபியே உங்களால் மழையை பொழியச் செய்ய முடியாது என்று கூறினால். வானில் இருந்து மழை பொழியாது என்று அர்த்தமா? இல்லை. மழை பொழியும், நபியே உங்களால் சுயமாக வானில் இருந்து மழையை பொழியச் செய்ய முடியாது என்றே அர்த்தமாகும்.
அதே போன்று தான் மேற்கூறிய வசனங்களில் நபியே உங்களால் மரணித்தவர்களை செவியேற்க செய்ய முடியாது என்று கூறினால்! மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. மரணித்தவர்கள் செவியேற்பார்கள், நபியே உங்களால் சுயமாக அவர்களை செவியேற்க செய்ய முடியாது அதாவது வெளிப்படையில் பதில் தரவைக்க உங்களால் முடியாது என்றே அர்த்தமாகும். அதே போன்று நபியே புறமுதுகு காட்டி சென்ற காஃபிர்களை உங்களால் செவியேற் செய்ய முடியாது என்று கூறினால்! காஃபிர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. காஃபிர்கள் செவியேற்பார்கள், நபியே உங்களால் புறமுதுகு காட்டி சென்ற அவர்களை சுயமாக செவியேற்க செய்ய முடியாது. அதாவது வெளிப்படையில் பதில் தரவைக்க உங்களால் முடியாது என்றே அர்த்தமாகும்.
குறிப்பு :- மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள் பிரகாரம் மரணித்தவர்கள் செவியேற்பார்கள் என்ற கருத்தையே நம்மால் காண முடிகிறது. மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை செவிமடுத்தும் செவிமடுக்காதவர்கள் போன்று சென்ற காஃபிர்கள் மரணித்தவர்களுக்கு சமமானவர்கள். என்ற கருத்தை மேற்கூறிய வசனங்களை மூலாதாரமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்